பாகுபலி என்று ஒரு கற்பனைப் படம் வெளியாக… அதில் ஷ்த்திரியர் என்கிற வார்த்தையை வைத்து சில சாதியினர் தங்களைப் பெறுமைப்படுத்தும் படம் இது என்று கொண்டாடுகிறார்கள். வேறு சில சாதியினர், இதே காரணத்துக்காக அப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்கிறார்கள்.

வன்னிய குல “ஷத்திரியர்கள்” மாநாட்டில் தந்தை பெரியார் பேசி. 1-6-1930 அன்று குடிஅரசு இதழில் வெளியானதை படித்தால் இரு தரப்பு மட்டுமல்ல.. அனைவருக்கும் தெளிவு கிடைக்கும்.

பாகுபலி” படக் காட்சி..

சகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்ற பெருமை பேசுவதாகவோ, தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருப்பதாகவோ இருக்கக்கூடாது என்று முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இம்மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஏனெனில், நீங்கள் சிலஜாதிக்குப் பெரியார்கள் ஆகவேண்டுமேன்றும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட நீ்ங்கள் கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக்கொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ்ஜாதி பட்டம் நிலைத்துவிடுதோடு நீங்கள் மேல்ஜாதி என்கின்ற தத்துவம் தகறாரில் இருந்துவிடுகின்றது.

உதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல சத்திரியர் என்றும் சொல்லிக்கொள்ளுகிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டத்தாராகிய பார்ப்பனர்களுக்கு கீழ்பட்ட ஜாதியார் என்பதை சிறிதும் எதிர்வாதம் இல்லாமல் ஒப்புக் கொண்டவர்களாகிவிட்டீர்கள்.ஆனால் உங்கள் சத்திரிய தன்மையாலோ தகராறுகளுக்கு குறைவில்லை.

நீங்கள் வன்னியர்குல சத்திரியர் என்றால் நாடார்கள் தங்களை அக்கினி குல சத்திரியர்ரென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் பூணூல் கயிறும் உங்கள் பூணூல் கயிற்றைவிட கொஞ்சமும் இளைத்ததல்ல. ஆனால் நாடார்களை சத்திரியர்கள் என்று ஒப்புக்கொள்ளாமல் இழி வார்த்தை என்று நீங்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி கூப்பிடுகிறார்கள். நீங்களும் அதுபோலவே நாடார்களை சத்திரியர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழி வார்த்தை என்று அவர்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி அவர்களை நீங்கள் கூப்பிடுகிறீர்கள். கடைசியில் கேசு ஏற்பட்டு பணச்செலவு செய்து யாராவது ஒருவர் தண்டனையும் அடைய நேருகின்றது.

நாயுடு ஜாதி என்றும் எங்கள் ஜாதிக்காரர்கள் உங்கள் இரண்டு பேரையும் சத்திரியர்கள் அல்ல என்று சொல்லிவிட்டு தாங்கள்தான் சத்திரியர்கள் என்கிறார்கள். ராஜா என்கின்ற மற்றொரு ஜாதிக்காரர்கள் நீங்கள் மூன்று பேரும் சத்திரியர்கள் அல்ல நாங்கள்தான் சத்திரியர்கள் என்கின்றார்கள். சிங்கு மராட்டியர் ஆகியவர்கள் நீங்கள் நால்வரும் சத்திரியர்கள் அல்ல நாங்கள்தான் சரியான சத்திரியர்கள் என்கிறார்கள்.

பெரியார்

இதுபோல் இன்னமும் குடகு சத்திரியர்கள் எத்தனையோ பேர் சத்திரிய பட்டத்திற்கு இத்தனை பேர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டியும் சண்டையும் போட்டுக் கொள்ளுகின்றார்களே ஒழிய இதன் பலனாய் எச்சில் கின்னம் கழுவுகவனுக்கும், பிச்சை எடுத்து வாழுபவனுக்கும் தரகு வேலை செய்பவனுக்கும் நோகாமல் பிராமணப் பட்டம் கிடைத்துவிட்டது. அப்படி கிடைக்கப்பெற்ற அந்த பிச்சை தொழில் பார்ப்பான் உங்களிடம் பணமும் வாங்கிக்கொண்டு மகாநாடு கூட்டி, சத்திரியன் உலகத்திலேயே கிடையாது என்று விளம்பரப்படுத்தி சொல்லிவிடுகிறான். அப்படி இருந்தும்கூட அவனிடம் உங்கள் ஒருவருக்கும் தகராறு கிடையாது. அன்றியும் அவர்களுக்கு முத்தமிட்டு காலைக் கழுவி தண்ணீரை குடிக்கப் போட்டி போடுவதில் குறைச்சலுமில்லை. உங்கள் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அனேகமாய் அவன் குருவாக இருக்கிறான்.

ஆகவே இந்த மாதிரி இழிவானதும் முட்டாள்தனமானதும் அர்தமற்றதுமான காரியங்களுக்கு இம்மாதிரி மகாநாடுகள் இனியும் கூட்டுவதாயிருந்தால் இம்மகாநாடுகள் அழிந்துபோவதே மேல் என்று வருத்தத்துடன் சொல்லிக்கொள்ளுகிறேன். தங்கள் ஜாதி உயர்த ஜாதி என்று சொல்லிக் கொள்ளுவதற்கு மாத்திரமே நாட்டில் இப்போது எங்கும் ஜாதி மகாநாடுகள் கூட்டப்படுவதும், அதோடு பிற ஜாதிகளை சாடையாகவும் வெளிப்படையாயும் இகழ்வதும் சாதி மகாநாடுகளின் சுபாவமாய்விட்டது.

இதன் பலனாகவே சக்கிலியர்கள் என்பவர்கள் தங்களை அருந்ததியர்கள் என்பதும், பள்ளர்கள் என்பவர்கள் தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதும், ஆசாரிகள் தங்களை செளராஷ்டிரப் பிராமணர்கள் என்பதும், தேவாங்கர்கள் என்பவர்கள் தங்களை தேவாங்கப் பிராமணர்கள் என்பதும், குயவர்கள் தங்களை குலால விஸ்வ பிராமணர்கள் என்பதும், இவ்வளவு சமூகத்தார்களும் தங்கள் தங்கள் உடலினால் கஷ்டப்பட்டு தொழில் செய்து பிற ஜனங்களுக்கு உதவியும் செய்து நியாயமான வழியில் வாழ்கை நடத்திக்கொண்டு தங்களை பிராமணன், இந்திரன், அருந்ததி, சந்திரன் என்று பல ஒழுக்கமற்ற சோம்பேறிப் பட்டங்களை வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றதை பார்கின்றோம்.

ஆனால் பார்ப்பான் பிச்சை எடுத்து சாப்பிட்டும் நோகாமல் மற்றொருவன் உழைப்பில் சாப்பிட்டுக்கொண்டும் இருந்துகொண்டு நீங்கள் யாரும் பிராமணர்கள் அல்ல; சத்திரியர் கூட அல்ல பேசப்போனால் வைசியர் கூட அல்ல, நாங்கள்தான் பிராமணர்கள்; நீங்கள் எல்லோரும் எங்களுக்கு தொண்டு செய்ய எங்கள் வைப்பாட்டி மக்களாய் இருக்க கடவுளால் பிறப்புவிக்கப்பட்ட சூத்திரர்கள் என்று தைரியமாய் சொல்லி சிவில் கிரிமினல் புஸ்தகத்திலும் அதை ஸ்தாபித்துவிட்டு மற்றும் சில உரிமைகளையும் தனக்கு வைத்துக்கொண்டு செளகரியமாய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த சோம்பேறி செளக்கிய நிலை நிலைப்பதற்கேதான் இப்பேர்ப்பட்ட நமது ஜாதி மகாநாடுகள் பெரிதும் உபயோகப்படதக்கதாய் இருக்கின்றன என்பதே எனது முடிவான அபிப்பிராயம்.

ஆகையால் சகோதரர்களே இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது? நாம் எவருக்கும் கீழ் ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது? நமக்குக் கீழும் நமது நாட்டில் எந்த சாதியும் இல்லை; நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்மநிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.”