ரவுண்ட்ஸ்பாய் கேள்வி..    ராமண்ணா பதில்

ரஜினி, “ஆன்மிக அரசியல்” என்றவுடன் பலரும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

ஆன்மீகம் என்பதற்கு ஏதேதோ விளக்கங்கள் சொல்லப்படுவது உண்டு. எதார்த்தத்தில் பக்தி மார்க்கத்தைத்தான் ஆன்மிகம் என்கிறோம். ரஜினியும்கூட, இமயமலை. திருவண்ணாமலை, பாபா என்றெல்லாம் சுற்றி வருவதால்தான் ஆன்மிகவாதி என்பதாகப் பார்க்கப்படுகிறார்.

தேர்தல் கட்சிகள் அனைத்திலும் ஆகப்பெரும்பாலோர் ஏதோ ஒரு கடவுளுக்கு – மதத்துக்கு பக்தியாக இருக்கும் ஆன்மிகவாதிகள்தான். பகுத்தறிவு பேசும் திராவிடக் கட்சிகளும், பொருள்முதல்வாதம் பேசும் பொதுவுடமைக் கட்சிகளும் இதற்கு விலக்கல்ல.

கோயில் திருவிழா, இஸ்லாமிய பண்டிகைகள், கிறிஸ்துவ நிகழ்ச்சிகளுக்கு தங்கள் கட்சி வண்ணத்தில் போஸ்டர், பேனர் அடிக்கும் இக்கட்சியினரை எங்கும் காணலாம்.

இடதுசாரி கட்சியின் அதிகாரப்பூர்வ இதழ், தீபாவளிக்கு சிறப்பிதழ் வெளியிடுவதும் நாம் அறிந்ததுதான்.

இதெல்லாம் சரியோ தவறோ.. எவருக்கும் பயம் வந்ததில்லை.

ஆனால் வெளிப்படையாக ஆன்மிக அரசியல் என்று ரஜினி பேசியதுதான் பலரையும் அச்சுறுத்தியிருக்கிறது.

ஆன்மிகம் பேசும் அமைப்புகளின் நடவடிக்கைகள் அப்படி.

ஆன்மிகவாதிகள் நிரம்பியிருக்கும் கட்சிகளைவிட.. ரஜினி பேசிய ஆன்மிக அரசியல் என்ற வார்த்தை பயப்படுத்தியதை இப்படி புரியவைக்கலாம்.

இந்து மதத்தில் எத்தனையோ ஊர்வலங்கள் நடக்கின்றன. ஊருக்கு ஊர் மாரியம்மன் கோயிலுக்கு பல கிலோ மீட்டர்கள் நடந்தே பால்குடம் எடுத்துச் செல்வது.. முருகன் கோயிலுக்கு நீண்ட யாத்திரையாக காவடி எடுத்துச் செல்வது எல்லாமும் நடக்கிறது. எந்தவித பிரச்சினையும் இல்லை.

ஆனால் இந்துத்துவ அமைப்புகள் நடத்தும் பிள்ளையார் (சதுர்த்தி) ஊர்வலம் மோதல்களை உண்டாக்கி விடுகிறதே.

அதுபோலத்தான், தற்போதைய கட்சிகளில் ஆன்மிகவாதிகள் இருப்பதும், ரஜினி ஆன்மிக அரசியல் பேசுவதும் வேறு வேறானவை என்று நினைக்கிறார்கள், எதிர்ப்பவர்கள்.

தவிர ரஜினியோ அவரது ரசிகர்களோ “ஆன்மிகத்தின்” பெயரால் கம்பு சுற்றுவார்கள் என்று நினைக்கவில்லை. ஆனால் அப்படி கம்பு சுற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு ரஜினியின் “ஆன்மிக அரசியல்” ஊக்கப்படுத்தி பக்கபலமாய் இருந்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

ரஜினிக்கு பின்னால் பாஜக இருக்கிறதா?

அப்படித்தான் அரசியல் விமர்சகர்கள் பலரும் யூகிக்கிறார்கள். தமிழக வாக்காளர்களைப் பொறுத்தவரை பா.ஜ.க. என்றால் எட்டிக்காயாக இருக்கிறது. கன்னியாகுமரி, கோவை தவிர பிற பகுதிகளில் நோட்டாவோடுதான் போட்டியிட வேண்டிய நிலை, பாஜகவுக்கு.

அதோடு, பாஜக சொல்படி ஆடுகிறது என்பதால்தான் ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க.வை வாக்காளர்கள் புறக்கணித்தார்கள் என்றும் நம்பப்படுகிறது.

ஆகவேதான் நேரடியாக பாஜகவில் ரஜினியை இணைக்காமல், தனிக்கட்சி துவக்கவைத்து, தேர்தல் நேரத்தில் அவருக்கு ஆதரலாம் என பாஜக நினைக்கிறதாம்.