டில்லி,

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள  பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

மேலும்,பேரறிவாளன் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு 3 வாரத்தில் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்த ராஜீவ்காந்தி,  ஸ்ரீபெரும்புதூரில் நடை பெற இருந்த காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டால் குண்டு வெடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக  சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர்,  கருணை அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய, கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்தியஅரசுக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால், மத்திய அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் தன்னை விடுதலை செய்ய கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால். அதில்,  ராஜீவ் கொலை தொடர்பாக, சர்வதேச தொடர்புகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தில் குளறுபடி உள்ளதாகவும்,  ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டு குறித்து விசாரிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். அந்த வழக்கிலும் அவரை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாத வரை தன்னை விடுதலை செய்யும் படி பேரறிவாளர் தரப்பில் மனு செய்யப்பட்டது. இதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. விடுதலை செய்ய வேண்டும் என்ற பேரறிவாளன் கோரிக்கையை ஏற்க கூடாது என்று பதில் மனு தாக்கல் செய்தது.

அதையடுத்து,  வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம்,   ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதில் தவறு என ஒரு வழக்கு நீதிமன்றம் வந்தது இதுவே முதன்முறை என்றும்,  இது ஒரு அசாதாரண சூழல் என்றது.

பேரறிவாளனின் மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை  பிப்ரவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.