அமெரிக்காவில் ரஜினி மக்கள் மன்றங்கள் துவக்குவது தீவிரம்

“காலா” பட கொண்டாட்டம்

தூத்துக்குடி கலவரம் குறித்து ரஜினி கொடுத்த வாய்ஸூம் அவரது காலா பட ரிலீசும் தமிழகத்தில் பல்வேறுவிதமான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் வட அமெரிக்கா (யு.எஸ்.ஏ.)வில் ரஜினி மக்கள் மன்றங்களைத் துவக்கும் பணி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

“அங்கு தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் ரஜினி மக்கள் மன்றம் துவங்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது” என்கிறார்கள் மக்கள் மன்றத்தினர்.

இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அமெரிக்க வாழ் தமிழரான  அருண்குமார் அழகர் சாமியை தொடர்புகொண்டு  பேசினோம்.

அமெரிக்காவின் அர்கான்சஸ் மாநில பென்டன்வில் என்கிற ஊரில்   வசிக்கிறார் 32 வயதான அருண்குமார்.  கணவன் மனைவி இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவில் மதுரை மாவட்டம் பேரையூர் கிராமத்தில் சோலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார்  எம்.சி.ஏ. படித்தவர். தற்போது பணிபுரிந்துகொண்டே கு எம்.பி.ஏ. ஐடி. படித்துக்கொண்டிருக்கிறார்.

அவர் நம்மிடம் தெரிவித்ததாவது:

“நான் மதுரை மாவட்டம் அருகே சிறு கிராமத்தைச் சேர்ந்தவன். ரஜினி என்றால் எனக்கு உயிர். ராஜாதிராஜா படத்திலிருந்து முதல் காட்சி பார்க்காத படமே இல்லை. அதோடு அவரது ஆன்மிகம் மிகவும் பிடிக்கும். அவர் சொல்லித்தான் திருவண்ணாமலை செல்ல ஆரம்பிதேன். அங்குள்ள அங்குள்ள ரமணர் ஆசிரமத்தில் உள்ள புத்தகங்கள் படிப்பேன். அதன் மூலம்  “நான் யார்” என்பதைக் கற்றுக்கொண்டேன். எந்த ஒரு சூழலிலும் தலைக்கனம் இல்லாமல் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதையும்  தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டால் உயர்வோம் என்பதையும் உணர்ந்தேன்.

பணி நிமித்தமாக அமெரிக்கா வந்தேன். ரஜினி கட்சித் துவங்குவதாக அறிவித்தவுடன், அதில் ஈடுபட விரும்பினேன்.

இங்கு வடக்கு அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் பிரிஸ்கோ என்ற ஊரில் அமெரிக்க தலைமை ரசிகர் மக்கள் மன்றம் செயல்படுகிறது.  இதற்கு செயலாளர் நாராயணன். இணைச் செயலாளர் ரமேஷ். துணைச் செயலாளர் நவநீதன்.   வட அமெரிக்கவுக்கு மட்டுமின்றி கனடா நாட்டுக்கும் இவர்கள்தான் பொறுப்பாளர்கள்.

இது தவிர மக்கள் தொடர்புக்கு தாரா என்பவர் செயல்படுகிறார். இப்படி நிறைய நிர்வாகிகள் இருக்கிறார்கள்.

நான் ட்விட்டரில் ரஜினியை பாலோ செய்கிறேன். வட அமெரிக்காவில் உள்ள மன்றம் குறித்து தகவல் தெரிவிக்குமாறு கோரினேன்.

அதற்கு ரமேஷின் ஈ மெயில் முகவரி அளித்து தொடர்புகொள்ளுமாறு கோரினர். அவரைத் தொடர்புகொண்டேன்.

ஏற்கெனவே ரஜினி மக்கள் மன்ற்த்துக்கு இணையம் மூலம் விண்ணப்பித்திருந்தேன்.

வட அமெரிக்காவில் ஐம்பது மாநிலங்கள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ரஜினி ரசிகர் மன்றத்தை ஒருங்கிணைக்கும் பணியில் தலைமை மக்கள் மன்றத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

நான் வசிப்பது அர்காணன்ஸ் மாநிலம். வேலை பார்ப்பது  டெக்சாஸ் மாநிலம்.

ஒவ்வொரு ஊருக்கும் மக்கள் மன்றம் பெயரில் வாட்ஸ்அப் குழு அமத்திருக்கிறார்கள். அதில் என்னை இணைத்தார்கள்.

எனக்கு பெரும்பாலும் வீட்டில் இருந்து வேலை செய்வேன். மாதம் ஒன்று அல்லது இரண்டு முறைதான் அலுவலகம் செய்வேன்.

என் ஊர் பெயரில் முதலில் வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்தோம. அப்போது மத்திய நிர்வாகிகளும், நானும் மட்டும் இருந்தோம். அதன் பிறகு, ரஜினி பெயரில் கட்சி துவங்கி நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் நல்லது என்று நினைப்பவர்கள சேர்த்தோம்.

இரண்டு மூன்று வாரத்தில பதினைந்து பேர் வரை சேர்த்திருக்கிறோம்.

நம் ஊர் போல எளிதாக இங்கே எவரையும் அணுகிவிட முடியாது. முக்கிய காரணம், நாம் வேறு நாட்டில் இருந்து வந்திருக்கிறோம் என்கிற ஒரு நெருடல் இருக்கும்.

இந்த நிலையில்தான் தமிழ் நண்பர்கள் ஒவ்வொருவரையும் அணுகி, ரஜினி மன்றம் பற்றிச் சொல்லி, ஒவ்வொருவராக சேர்த்து வருகிறோம்.

நான் வசிக்கும் பென்டன்வில் என்ற ஊரில் கண்ணன் என்பவர் வசிக்கிறார். அவர் தனியார் துறையில் மிக உயர் அதிகாரி பொறுப்பில் இருக்கிறார். இருபது வருடங்களாக அமெரிக்காவில் வசிக்கும் இவர் தீவிர ரஜினி ரசிகர்.

பென்டன்வில் பகுதிக்கு அவர் செயலாளராகவும் நான் இணை செயலாளராகவும் பொறுப்பேற்று செயல்பட இருக்கிறோம். விரைவில் நியமன உத்தரவு வரும்.

இதே போன்ற முயற்சி வட அமெரிக்கா முழுதும் நடக்கிறது.

 

அருண்குமார்

இந்த ஒருங்கிணைப்புக்கு காலா படம் மிக முக்கிய உதவியாக இருக்கறது.   அமெரிக்க ரஜினி மன்ற தலைமையகம் காலா திரைப்படத்தை பிரம்மாண்டமாக கொண்டாடியது. காலா படம் போட்ட சர்ட், போஸ்டர், கார் ஸ்டிக்கர்ஸ் போன்றவற்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

காலா பட தியேட்டர்களில் பேனர்கள் வைத்தோம்.

காலா வெளியீட்டின் போது வாசிங்கடன் டி.சி.யில் நூறு பேருக்கு அன்னதானம் கொடுத்தார்கள்.

அதாவது அமெரிக்கவிலும் ஏழைகள் இருக்கிறார்கள். டிராபிக் சிக்னல்களில் “எனக்கு வீடு இல்லை” என்று போர்டு வைத்து உதவிக்காக காத்திருப்பார்கள்.  அவர்களில் நூறு பேரை அழைத்து பீசா, பர்கர் என்று அளித்து அன்னதானம் நடந்தது.

அமெரிக்காவில் பல திரையரங்குகளில் காலா வெளியிடப்பட்டது. இங்கு சான்பிராஸ்கோ மாநிலத்தில் சான்பிராஸ்கோ தியேட்டரில் மட்டும் முதல் நாள் 54  காட்சிகள் திரையிடப்பட்டன.

நான் இருக்கும் பென்டன்வில் ஊரில் ஜூன் 6 அன்று நான்கு காட்சிகள் ஆறு காட்சிகள் வெளியிடப்பட்டன.  தமிழில் இரண்டு தெலுங்கில், இரண்டு மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டது” என்று உற்சாகத்துடன் கூறினார் அருண்குமார்.

அவரிடம், “அமெரிக்காவில் குடியேறுபவர்கள் அங்கேயே குடியுரிமை பெற்று நிரந்தரமாக தங்கிவிட விரும்புவார்கள். இந்த நிலையில் தமிழக அரசியல் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை” என்றோம்.

அதற்கு அருண்குமார், “நான் இன்னும் அமெரிக்கக் குடியுரிமை வாங்கவில்லை. எங்களுக்கு தமிழ்நாட்டில்தான் ஓட்டுரிமை இருக்கு.

எதிர்க்காலத்தில் வாய்ப்பு அமைந்தால் நாங்களும் அமெரிக்க குடியுரிமை வாங்குவோம்.

ஆனாலும் தமிழ்நாடுதான் எங்களுக்கு உயிர். அங்கே எதிர்கால அரசியிலாவது சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எங்களது சந்ததியினர் நல்ல சிஸ்டத்தில் வாழ வேண்டும்” என்றார் அருண்குமார்.

அவரிடம், “அமெரிக்க சிஸ்டத்துக்கும் தமிழ்நாட்டு சிஸ்டத்துக்கும் என்ன வேறுபாடு” என்றோம்.

அதற்கு அவர், “எவ்வளவோ சொல்லலாம். குறிப்பாக லஞ்சம்.

இங்கு லஞ்சம் என்பதே இல்லை. சரியான டாக்குமெண்ட்டுகள் கொடுத்தால் உரிய காலத்தில் அரசு அலுவலகத்தில் நமது வேலை முடியும்.

ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பிறப்புச் சான்றிதழில் இருந்து இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை லஞ்சம்தான்.

இன்னொரு உதாரணம். இங்கே மருத்துவரின் பிரிஸ்கிரிப்சன் இல்லாமல் மருத்துக்கடையில் எந்தவொரு மருந்தும் வாங்க முடியாது. அங்கு மருந்துக்கடையிலேயே எந்தவித மருந்தும் வாங்கலாம்.

இங்கே தீப்பெட்டி வாங்கினால்கூட பில் உண்டு. அங்கே அப்படி இல்லை. அப்படி பில் இல்லாமல் வாங்கும் பொருட்களுக்கு எப்படி அரசுக்கு வரி செலுத்துவார்கள். பிறகு எப்படி அரசு நடக்கும்?

இதையெல்லாம் வைத்துத்தான் தலைவர் ரஜினி, “சிஸ்டம் சரியில்லை” என்றார்.

எதிர்கால எங்கள் தமிழருக்கு நல்லொதொரு அரசியல் சூழலை சிஸ்டத்தை ரஜினி தலைமையில் அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்” என்ற அருண்குமார், “அப்படியோர நல்ல சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட தமிழன் என்கிற முறையில் நாங்களும் உதவுவோம்” என்று சொல்லி முடித்தார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rajini people forum has a grand starting in US, அமெரிக்காவில் ரஜினி மக்கள் மன்றம் திறப்பு விழா
-=-