சர்ச்சை நடிகர் ரித்தீஷுடன் ரஜினி

ர்ச்சை நடிகர் ரித்தீஷ் இன்று ரஜினியை சந்தித்தார்.

நடிகர் ரித்தீஷ் தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்த பிறகு அ.தி.மு.க.வில் இணைந்தார்.

இவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. கடந்த 2012ம் ஆண்டு, ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய தி.மு.க.,செயலர் கதிரவன் கடத்தப்பட்டார். இந்த வழக்கில் ரித்தீஷ் மீது புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் அவர்  , மதுரை உயர் நீதிமன்ற கிளையில்  முன் ஜாமின் பெற்றார்.

கதிரவனை ஐந்து பேர் கடத்தி, 2 கோடி ரூபாய் கேட்டதாகவும், பின், ரித்தீஷ் கடத்தல்காரர்களிடம் பேசிய பின் கதிரவன் விடுவிக்கப்பட்டார் என்றும் அப்போது புகார் எழுந்தது.  இவ்வழக்கில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த சினோஜ், திண்டுக்கல்லில் காவல்துறையினரால் “என்கவுன்டரில்’ கொல்லப்பட்டார். மேலும் இவ்வழக்கில் தொடர்புள்ள பிரபல ரவுடி “வரிச்சியூர்’ செல்வம் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். செல்வத்தின் தம்பி காவல்துறையில் செந்தில் சரணடைந்தார்.

இது தவிர ரித்தீஷ் மீது மோசடி வழக்கு ஒன்றும் பதியப்பட்டது.   சென்னையைச் சேர்ந்த ஆதி நாராயணன் என்ற சிவா, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ரித்தீஷ் உட்பட ஏழு பேர் மீது புகார் அளித்தார். அந்தப் புகாரில், “அ.தி.மு.க-வைச் சேர்ந்த நடிகரும், முன்னாள் எம்பி.யுமான ரித்தீஷ் உள்பட ஏழு பேர் சேர்ந்து,  என்னிடம் இருந்து இரண்டு கோடியே 18 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ரித்தீஷ் மீதும் இரண்டாவது குற்றவாளியாக அவருடைய மனைவி ஜோதீஸ்வரி மீதும் வழக்கு பதியப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில், “புகார்தாரர் ஆதிநாராயணன், அமெரிக்காவில் இன்ஜினீயராகப் பணியாற்றுகிறார். அவரிடம் நடிகர் ரித்தீஷ், அவருடைய மனைவி ஜோதீஸ்வரி உள்பட ஏழு பேர், கடந்த 2014-ம் ஆண்டு, 2 கோடியே 18 லட்ச ரூபாயை வாங்கி, ஏமாற்றியுள்ளனர். பலமுறை கேட்டும் பணத்தைக் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக, அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்” என்று கூறப்பட்டது.

இது குறித்து ரித்தீஷ் தரப்பில் அப்போது,  “பணத்தை ஏற்கெனவே கொடுத்துவிட்டோம். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வழக்கை சட்டப்படி சந்திப்போம்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ரித்தீஷ் மீது புதிதாக ஒரு புகார் கூறப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள எறையானூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 35). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பயிற்சி முடித்துள்ளார்.

இவரிடம் திண்டிவனம் நல்லியகோடான் நகரை சேர்ந்த கண்ணன் என்பவர் தனக்கு அரசியல் பிரமுகர்கள் சிலரை நன்கு தெரியும், அவர்கள் மூலமாக அரசு வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு பணம் தர வேண்டும் என்றும் கூறினார்.

இதையடுத்து ஜெயபாலன் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.7 லட்சத்தை கண்ணனிடம் கொடுத்தார்.

இந்த பணத்தை கண்ணன் முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ரித்தீஷிடம் கொடுத்ததாகவும்,  ஆனால் கண்ணனும், ரித்தீஷூம் ஜெயபாலனுக்கு அரசு வேலை வாங்கித்தரவில்லை என்பதும்தான் புகார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜெயபாலன் புகார் செய்தார். அதன் பேரில் ரித்தீஷ், கண்ணன் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை, இன்று ரித்தீஷ் சந்தித்தார்.

நடிகர் சங்கத் தேர்தல் குறித்து ரஜினியை சந்தித்ததாக  ரித்தீஷ் தரப்பில் கூறப்படுகிறது.

“சிஸ்டம் சரியில்லை. அதை சரிப்படுத்தவே அரசியலுக்கு வருகிறேன் என்று கூறும் ரஜினி, பல்வேறு புகார்களுக்கு ஆளாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நபரை வீட்டுக்கு அழைத்துச் சந்திக்கலாமா” என்று அரசியல் வட்டாரத்தில் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.