மழை நீர் சேமிப்பு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு!

சென்னை:

ழைநீர் சேமிப்பு இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

“மழைநீர் சேகரிப்பில் தமிழகம் முன்னிலையில் இருந்து வந்தது. தமிழகத்தை பின்பற்றியே டில்லி உள்பட பிற மாநிலங்களும் மழை நீர் சேகரிப்பை ஊக்கப்படுத்தியது.

ஆனால், சமீபகாலமாக மழைநீர் சேகரிப்பு குறித்து அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், பொது மக்கள் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டும் வரலாறு காணாத அளவில் வறண்டு போய் உள்ளது.

இந்த நிலையில்,  மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத அனைத்து  கட்டிடங்களுக்கும் மழை நீர் வசதியை உடனே ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று  வழக்கறிஞர் தியாகராஜன் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

‘அவர் தாக்கல் செய்த மனுவில்,  தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு வசதியை உருவாக்க வேண்டும் என கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த அரசின் உத்தரவை யாரும் முறையாக பின்பற்றவில்லை என்றும் மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத  கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என விதி உள்ள நிலையில்,  அண்மைக் காலங்களில் எந்த ஒரு கட்டிடங்களும் இதுபோல மழைநீர் சேமிப்பு வசதியை ஏற்படுத்துவதில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.   மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத  கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் , நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு இன்று  விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலித்து எட்டு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

2001-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, மழைநீர் சேமிப்பு குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். இது குறித்து தொலைக்காட்சியில் அவரே பேசி மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். அதன் காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு பு திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Rain water storage: Chennai High Court orders Tamil Nadu government, மழை நீர் சேமிப்பு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு!