கூட்டாட்சி என்ற பெயரில் மாநில அரசுகளை மோடி நிர்பந்தம் செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா பரவல் குறித்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா கட்டுப்பாடுகள் மட்டுமன்றி பெட்ரோலிய பொருட்களின் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று கூறினார்.

2014 ம் ஆண்டு 9.48 ரூபாயாக இருந்த மத்திய அரசின் கலால் வரி தற்போது 27.90 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், தமிழ்நாட்டில் ரூ. 15.67 ஆக இருந்த வாட் தற்போது 22.54 ரூபாயாக உள்ளது.

மாநில அரசுகளை விட மத்திய அரசு தனது கலால் வரியை பல மடங்கு உயர்த்தியுள்ளது, 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் 32.90 ரூபாயாக இருந்த மத்திய கலால் வரி எதிர்ப்புகளுக்கு இடையே ஐந்து மாநில தேர்தலை மனதில் வைத்து 5 ரூபாய் குறைக்கப்பட்டது.

கடந்த 8 ஆண்டு மோடி ஆட்சியில் பெட்ரோலிய பொருட்களின் வாரியாக மக்களிடம் இருந்து ஈட்டிய வருவாய் சுமார் 26 லட்சம் கோடி.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற முதல்வர்களுடனான சிறப்பு கூட்டத்தில் மாநில அரசு வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று கூறியிருப்பது பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து, தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என அனைத்திற்கும் மாநில அரசு தான் காரணம் என்று தனது பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார் பிரதமர் மோடி.

பெட்ரோல் மீதான 68 சதவீத வரி மத்திய அரசால் விதிக்கப்படுகிறது.

கூட்டாட்சி என்ற பெயரில் மோடி அரசு மாநில அரசுகளுடன் ஒத்துழைப்பை பேணுவதற்கு பதில் நிர்பந்தம் செய்கிறது.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.