டெல்லி: ராகுல் காந்தியின் பார்ட்டி வீடியோ வைரலான நிலையில், அது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள் பயணமாக நேபாளம் சென்றதாக தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து,  அவர்  வெளிநாட்டு நைட் கிளப்பில் நடைபெற்ற  பார்ட்டியில் கலந்து கொண்டது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராகுல் காந்தி பெண் ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது போன்றும், செல்போனை இயக்குவது போன்றும் உள்ளது.

ராகுல் காந்தியுடன் இருக்கும் பெண் நேபாள நாட்டுக்கான சீன தூதர் எனவும், அந்நாட்டு பிரதமரை ஹூ யாங்கி எனவும், நேபாள முன்னாள் பிரதமர் ஷர்மா ஒலியை ஹனிட்ராப்பில் (பாலியல் வலை வீசி அதில் சிக்கும் வைத்து மிரட்டுவது) சிக்க வைத்தவர் எனவும் பலவாறான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால்,  ராகுல் காந்தி தனது பத்திரிகையாளர் நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேபாளம் சென்றுள்ளதாகவும், திருமணம் முடிந்து அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டியில் அவர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ராகுல் காந்தி பார்ட்டியில் கலந்து கொண்டதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது

இதுகுறித்து பாஜக தேசிய தகவல் தொழிநுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா தனது டிவிட்டர் பக்கத்தில், “மும்பை தாக்குதலின் போது, ராகுல் காந்தி இரவு விடுதியில் இருந்தார். காங்கிரஸ் கட்சி மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கும் சமயத்தில் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு பார்ட்டில் பங்கேற்றிருக்கிறார். எந்த சமயத்திலும் அவர் சீராகவே இருக்கிறார். காங்கிரஸ் தனது தலைமை பதவியை யாருக்கும் விட்டுக்கொடுக்காத சூழலில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்தநாள் கொண்டாடவும், கேக் வெட்டி கொண்டாடவும் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு சென்றது போல் அழைக்கப்படாத விருந்தாளியாக ராகுல் காந்தி செல்லவில்லை. நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நட்பு நாடான நேபாளத்திற்கு தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி சென்றுள்ளார்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகுல் காந்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எனன் தவறு இருக்கிறது? சங்கிகள் ஏன் அவரைப் பற்றி பயப்படுகிறார்கள்? சங்கிகள் ஏன் பொய்களை பரப்புகிறார்கள்? நாம் அனைவரும் தனிப்பட்ட விழாக்களில் கலந்து கொள்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், ராகுல் காந்தியின் நேபாள பயணம் குறித்து அந்நாட்டு பத்திரிகையான காத்மாண்டு போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், “ தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கள் கிழமை மாலை விஸ்தாரா விமானம் மூலம் மாலை 4.40 மணியளவில் நேபாளத் தலைநகர் காத்மாண்டு வந்ததாகவும், அவருடன் மூன்று பேர் வந்ததாகவும், அவர்கள் அனைவரும் காத்மாண்டு மேரியாட் ஹோட்டலில் தங்கியுள்ளதாக தெரிவித்து உள்ளது.

மேலும், நேபாள பத்திரிகையாளரான சும்னிமா உடாஸின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்துள்ளார். சும்னிமா உடாஸ் – நிமா மார்டின் ஷெரபா ஆகியோரின் திருமணம் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. அவர்களது திருமண வரவேற்பு மே 5ஆம் தேதி ஹயாத் ரீஜன்ஸி ஹோட்டலில் நடைபெறுகிறது. திருமணத்தில் கலந்து கொள்ள சும்னிமா உடாஸின் குடும்பத்தினர் ராகுல் காந்தியை அழைத்துள்ளதாக மியான்மருக்கான நேபாள தூதராக இருக்கும் சும்னிமா உடாஸின் தந்தை பீம் உடாஸ் தெரிவித்துள்ளார். திருமணத்தில் கலந்து கொள்ள இந்தியாவை சேர்ந்த வேறு சில விவிஐபிகளும் வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார் என்றும் காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சும்னிமா உடாஸ் என்பவர் நேபாளத்திற்கான சீனா தூதரின் மகள் ஆவார். சில வருடங்களுக்கு முன் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி இந்தியா நேபாளத்தின் நிலங்களை ஆக்கிரமித்து உள்ளது என்று கூறினார். அது கடுமையாக கண்டிக்கப்பட்டது. சர்மா ஒலி அவ்வாறு கூற காரணம் சீனாவின் அழுத்தம் என்றும், சீன தூதர் தான் அவரை அவ்வாறு பேச வைத்தார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அவரது மகளுடன் ராகுல்காந்தி நைட்கிளப்பில் பேசிக்கொண்டிருப்பதால், இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.