சென்னை: புழல்  சிறையில் பெண் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதை தடுக்கச் சென்ற  வார்டனுக்கு அடி உதை விழுந்தது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னையை அடுத்த புழலில், ஆண்கள் பெண்கள் இருபாலாருக்கும் தனித்தனி சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. மேலும் பல வழக்குகளில் சிறையில் உள்ள முக்கிய கைதிகள், பயங்கரவாத வழக்குகளில் சிக்கிய கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், புழல் சிறையில் உள்ள  பெண்கள் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் மற்றும் பெண் கைதிகளில் இடையே மோதல் ஏற்பட்டது. இங்குள்ள பெண்கள் சிறையில்,  விசாரணை பெண் கைதிகள், தண்டனை பெண் கைதிகள்  மற்றும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்து குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மோனிகா சவுத் என்ற கைதிக்கும், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சீனதாண்டா என்ற கைதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  இது கைகலப்பாகவும் மாறியது. இவர்களுக்கு ஆதரவாக மேலும் சில கைதிகள் மோதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பெண் சிறை வார்டன், தகராறில் ஈடுபட்ட இரு வெளிநாட்டு பெண் கைதிகளையும் விலக்கிவிட முயன்றார். உடனே இருவரும் சேர்ந்து வார்டன் கோமளாவை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த  வார்டன் கோமளா, சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறை வார்டனை வெளிநாட்டு பெண் கைதிகள் அடித்து உதைத்த சம்பவம் புழல் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.