கோவில்களுக்கு புகழ்பெற்ற மாவட்டங்களில் தஞ்சை மாவட்டம் முக்கியமான ஒரு மாவட்டமாகும். தஞ்சையில் சோழர் காலத்தில் நிறைய கோவில்கள் கட்டப்பட்டன. அந்த வழியில் வந்த சோழ அரசரால் அம்மனுக்கு என கட்டப்பட்ட மிக முக்கியமான கோவில் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்.

கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.

1728 -1735 ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோவிலாக கட்டினார். காலப்போக்கில் இது இவ்வளவு பெரிய கோவிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.

தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத் திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். தஞ்சைக்கு கிழக்காக அமையப்பெற்ற காவல் தெய்வமே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று சோழ சம்பு எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகா ராஜாவால் இக்கோவில் உருவாக்கப்பட்டபோது, இப்பகுதி புன்னை வனக்காடாக இருந்துள்ளது. மேலும், சிவ பெருமானை வழிபட கோவிலிலிருந்து சற்றுத் தொலைவில் கைலாசநாதர் கோவிலையும் கட்டினார் மகா ராஜா.

சுயம்பு அம்மன் – மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பாகும். மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு சாற்றப்படுகிறது.

விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைல காப்பு அபிஷேகம் நடைபெறும். அவ்வமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும். அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புணுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும்.

தைலாபிஷேக நேரத்தில் அம்பாளின் தைலகாப்பின்போது உக்ரம் அதிகமாகும்.அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். சுமார் 6 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன். அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.

அம்மன் சன்னதிக்கு அருகில் உள்ள தொட்டி உள்தொட்டி என்றும், பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டி வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது. அம்மை நோய்கண்டவர்கள் இந்த இரண்டு தொட்டிகளிலும் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் கோடைநாட்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து தானாக மாறிவிடும் பழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே அன்னையை முத்து மாரி என்று அழைக்கின்றார்கள்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி வார்க்கும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து உள்தொட்டி, வெளித்தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எவ்வித சிரமமும் இன்றி குணமடைந்து வருவது இன்றுவரை கண்கூடாக உள்ளது. இங்கு உட்பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் பாடகச்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசகராக இருந்து குறைவிலா அன்னதானம் செய்ததுடன் தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து வந்து தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார். ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் மாரியம்மன் யந்திர பிரஷ்டை செய்யப்பட்டதாகும். ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் கோவில் இது.

கடவுள் வாகனங்களில் இயற்கை வடிவான வாகனங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன வாகனங்கள், கலப்பு வடிவ வாகனங்கள், பூத கின்னர வாகனங்கள், அபூர்வ வகை வாகனங்கள் கூட்டு வாகனங்கள் எனப் பல வாகனங்கள் உள்ளன. இவையல்லாது, இறைவனும் இறைவியும் பல்லக்கில் பவனி வருவது என்பதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதர வாகனங்களைக் காட்டிலும், இறைவனோ இறைவியோ பல்லக்கில் பவனி வருகையில் அதிக அளவிலான அலங்காரங்களும், ஜொலிக்கும் மின் விளக்கு அலங்காரங்களும் பல்லக்கு வாகனத்தின் தனிச்சிறப்பு. அதிலும் இரவு நேரத்தில் மின்னொளிப் பாய்ச்சலுடன், இறைவனையோ, இறைவியையோ சுமந்து வரும் பல்லக்கினைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் திரள்வது இன்றளவும் நடைபெற்று வருகிறது.