புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் இன்று தாக்கல் செய்த நிலையில்,  அதில், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு,  இலவச லேப்டேப், காலை சிற்றுண்டி,  சிபிஎஸ்இ பாடத்திட்டம்,  சிலிண்டருக்கு ரூ.300 மானியம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி. புதுச்சேரி சட்டப்பேரவையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக இந்தாண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மத்திய அரசு புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்த நிலையில், இன்று தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி.

புதுச்சேரி மாநில சட்டசபையில் கடந்த 12 ஆண்டுகளாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. புதுச்சேரியில் கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு புதுச்சேரியில் முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.  இந்த நிலையில், இந்த ஆண்டு முழு பட்ஜெட் செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, இன்று காலை புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கியதும், ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். சுமார், 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரையில் பேசிய முதல்வர், தமிழ் வளர்ச்சியையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்த புதுச்சேரியில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை சிபிஎஸ்இ பாடத்திட்டமாக மாற்றப்படும்

11, 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விரைவில்  வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மீனவர் உதவித்தொகை ரூ.3,000 லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மீன்துறைக்கு ரூ.1,946 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின் சிக்கனத்தை கடைபிடிக்க ரூ.4.5 கோடியில் எல்இடி தெருவிளக்குகள்

பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார்.

அந்தவகையில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட் உரையில் முதலமைச்சர் அறிவிப்புகள் பின்வருபவை; 50 புதிய மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

தொற்று நோயை கண்டறிய புதுச்சேரியில் ஆய்வகம் அமைக்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கு தேசிய வங்கியில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகையாக செலுத்தப்படும். பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 ஆண்டுகளுக்கு ரூ.50 ஆயிரம் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும் என முதலமைச்சர் விளக்கமளித்தார்.

எம்எல்ஏ மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்படும்.

பிளாஸ்டி பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள் பயன்படுத்த நடவடிக்கை

மீனவர் உதவித்தொகை ரூ.3,000 லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

பட்ஜெட்டில் மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.