உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் கடைசியாக நேற்றிரவு அர்ஜென்டினா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் வரை மொத்தம் 388 பெனால்டி ஷீட் வாய்ப்புகளில் 274 கோல்கள் போடப்பட்டுள்ளது.

1986 ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் 20 சதவீத நாக்-அவுட் போட்டிகள் பெனால்டி ஷூட் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் டி.வி. கேமராக்கள் முன்பு தங்கள் திறமையையும் அணியின் வெற்றியையும் நிர்ணயிக்க கோல் கீப்பருடன் சேர்த்து களத்தில் நிற்கும் ஆறு பேரின் மனநிலை என்னவாக இருக்கும் என்று உளவியல் ஆய்வாளர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வில் இந்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கெய்ர் ஜோர்டட் என்ற 48 வயது உளவியல் நிபுணர் இதுதொடர்பாக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் உளவியல் ஆய்வு குறித்து ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழில் வெளியிட்டிருக்கும் தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

நார்வே நாட்டில் விளையாட்டுத் துறை பேராசிரியராக பணியாற்றிய போது விளையாடிய கால்பந்து போட்டியில் பெனால்டி ஷூட் அடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் பந்தை வலதுபுறம் அடித்து கோல் போடவேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்கிய நிலையில் தான் திட்டமிட்டதையும் மீறி தன்னையறியாமல் இடதுபுறம் அடித்து கோல் போட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், அப்போது முதல் இது எதனால் ஏற்பட்டது என்பது குறித்து யோசிக்க ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கெய்ர் ஜோர்டட்

பின்னர், நெதர்லாந்துக்கு சென்று பணியாற்றிய போது அந்நாட்டு கால்பந்து அணி சிறப்பாக விளையாடிய போதும் பெனால்டி ஷூட் முறையில் இதுவரை மூன்று முறை உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டது இது தன்னை வெகுவாக பாதித்ததை அடுத்து இதுகுறித்து ஆய்வு செய்ய தொடங்கியதாக கூறியுள்ளார்.

இதற்காக 1976 ம் ஆண்டு முதல் டி.வி. யில் ஒளிபரப்பான உலகக்கோப்பை மற்றும் யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளின் வீடியோக்களை தேடிப்பிடித்து சேமிக்க ஆரம்பித்த கெய்ர் ஜோர்டட் 1976 க்கு முந்தைய போட்டிகள் குறித்த வீடியோக்களையும் சில தனிநபர்களிடம் இருந்து கேட்டு வாங்கி பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தவிர, பெனால்டி ஷூட் அடிக்க களமிறங்கிய சில வீரர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களது மனநிலை மற்றும் அவர்களது அணியைத் தாண்டி மொத்த நாட்டின் எதிர்பார்ப்பும் அவர்கள் தோள்மீது ஏற்படுத்திய அழுத்தம் குறித்தும் அவர்களுடன் விவாதித்துள்ளார்.

பதட்டம் என்ற உணர்ச்சி பெனால்டி ஷூட் அவுட்களுடன் தொடர்புடைய ஒன்று என்றும் ஒரு வீரர் எந்த அளவுக்கு அழுத்தத்தை உணர்கிறாரோ அதைப் பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் அவர் கண்டறிந்தார்.

  • சில வீரர்கள் விசிலடித்த வேகத்தில் விரைந்து சென்று பந்தை உதைத்து விடுகிறார்கள்.
  • சிலர் கோல்கீப்பரை கண்ணோடு கண் பார்ப்பதை தவிர்க்கிறார்கள்.
  • டி.வி. கேமராவை கண்டால் தனக்கு கால் நடுக்கம் ஏற்படும் என்று ஒருவீரர் டாக்டர் ஜோர்டெட்டிடம் கூறியுள்ளார்.
  • கைகள் மற்றும் கால்களைப் போலவே மூளையும் ஷூட்அவுட்களை தீர்மானிக்கிறது.

அதேபோல், தங்கள் அணி வெற்றி பெறும்போது கோல்கீப்பர்கள் ஹீரோக்களாக வர்ணிக்கப்படுகிறார்கள், ஆனால் தோற்கும் போது இவர்கள் மீது அவ்வளவாக பழி விழுவதில்லை இது அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கிறது.

அவரது ஆராய்ச்சியின்படி,

  • பெனால்டி ஷூட் அடிக்க போதுமான நேரத்தை எடுத்துக் கொண்ட வீரர்கள் தங்கள் இலக்கை சரியாக அடைந்திருக்கின்றனர்.
  • இக்கட்டான சூழலை சமாளிக்க மூச்சை ஆழ்ந்து இழுத்து விடுவதுடன் நம்பிக்கையுடன் செயல்படுவது சிறந்த பலனை தருகிறது.
  • எந்தவித சலனமும் இன்றி தங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வீரர்கள் சரியாக கணித்து விளையாடுகிறார்கள்.

இதற்கு நீண்ட கால மனநல பயிற்சி அவசியம் என்று டாக்டர் ஜோர்டெட் கூறுகிறார்.

மனித நடத்தையை தெரிந்துகொள்ள விளையாட்டு பயனுள்ளதாக இருக்கும். அதில் அரிதாக நிகழும் உலகக் கோப்பை ஷூட்அவுட்கள் மறக்கமுடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வேலைக்கும் அழுத்தத்தின் கீழ் செயல்திறன் தேவைப்படுகிறது என்பதை விளையாட்டில் மிகவும் பதட்டமான சில நிமிடங்களிலிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அழுத்தத்தின் கீழ் செயல்திறன் சவால்கள் உலகக் கோப்பை ஷூட்அவுட்கள் மட்டுமன்றி – வேலை நேர்காணல்கள், தொழில் நிமித்தமான சந்திப்புகள், விரும்பத்தகாத உரையாடல்கள் போன்றவற்றை உணரக்கூடிய வாழ்க்கைத் தருணங்கள் – என சவாலான தருணங்கள் உலகளாவிய அளவில் நம் அனைவருக்கும் உள்ளது என்பது இவரது ஆய்வின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.