சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவது பெருமையாக இருக்கிறது என்று செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல ஊர்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பலராலும் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து இந்தியாவின் செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘எனது மாநிலம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. ஒற்றுமையாக, அமைதியாக. தமிழனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். அடுத்த தலைமுறையினர் நவீன மயமத்தில் உள்ளனர்.

அதே சமயத்தில் அவர்களிடம் கலாச்சாரம் புரையோடியுள்ளது. ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் அடையாளம். இதற்கு மதிப்பளிப்போம். நானும், அனைவரும் விலங்குகளின் உரிமைக்காக தான் இருக்கிறோம்.

அது இங்கே பிரச்னை இல்லை. ஆனால் இங்கே கலாச்சாரம் மற்றும் வாழ்வாதாரம் தான் உள்ளது ’’ என்று தெரிவித்துள்ளார்.