அரசு போக்குவரத்து கழகங்களை (அ.போ.க.) தனியார் பங்களிப்புடன் நடத்துவது குறித்து தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பேருந்து கொள்முதல், இயக்கம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை மொத்த ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க அல்லது பொதுத் துறை மற்றும் தனியார் கூட்டு ஒப்பந்த அடிப்படையிலோ வழங்க தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாகப் போக்குவரத்துத் துறை சார்பாக தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் வருவாய் நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் போக்குவரத்து கழகத்திடமே இருக்கும் என்றும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-2022 நிதியாண்டில் அ.போ.க.களுக்கு 6,488 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுளளது.

பயணிகளுக்கு தரமான சேவை வழங்குவதற்கு அ.போ.கழகங்கள் பொறுப்பேற்கும். தனியார் ஆபரேட்டர்கள் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் எத்தனை கி.மீ. இயக்கவேண்டும் என்ற குறைந்த பட்ச தூரத்தின் அடிப்படையில் அவர்களுக்கு கட்டணம் வழங்கப்படும்.

மொத்த ஒப்பந்தம் மூலம் பேருந்துகளை வாங்கும் மூலதனச் செலவு மற்றும் உதிரிபாகங்கள், நுகர்பொருட்கள் உள்ளிட்ட பராமரிப்பு செலவைக் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. இதனால் பராமரிப்பு ஊழியர்களின் சம்பளச் செலவு குறையும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி ஒருங்கிணைந்த மல்டிமோடல் டிரான்சிட் சிஸ்டம் (DIMTS) என்ற தனியார் முயற்சி மூலம் டெல்லியில் பேருந்து இயக்குவதற்கான செலவு 30 – 50 % குடைந்துள்ளதாகவும். டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய மாடல்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டீசல் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு மொத்த ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

GCC எனப்படும் மொத்த ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்குவது உலகளவில் பிரபலமான மாடல். டெல்லி, மும்பை, புனே மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்கள் ஜிசிசி மாடலில் பேருந்துகளை இயக்குகின்றன என்று இன்ஸ்டிடியூட் ஃபார் டிரான்ஸ்போர்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிசி நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி சிவசுப்ரமணியம் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை ஒரு புதுமையான மாடல் என்று கூறியுள்ளார்.

“அ.போ.க.க்கள் தெளிவான செயல்திறன் குறிகாட்டிகளை வெளியிட வேண்டும் மற்றும் குடிமக்கள் நம்பகமான மற்றும் வசதியான பேருந்து சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்ய மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்” என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் நகர்ப்புற பொறியியல் பேராசிரியர் கே.பி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், “பயணிகளின் எண்ணிக்கையில் எந்த குறையும் இல்லை. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பள்ளி மாணவர்களுக்கு பேருந்து பயண அட்டை போன்ற சமூக நோக்கங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். மொத்தத்தில் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தால் சரி” என்று கூறியுள்ளார்.

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது 2020-2021 ஆம் ஆண்டில் அ.போ.க,க்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 70 லட்சம் மக்களுக்கு சேவை செய்தன. 2021-2022ல் ஒரு நாளைக்கு 1.21 கோடியாக உயர்ந்தது, மார்ச்-2022ல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 1.55 கோடியாக அதிகரித்துள்ளது.