சென்னை: தமிழ்நாட்டில் சொத்து வரி, மின்கட்டணம் உள்பட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசுக்கு இணையாக தனியார் பேருந்து சேவைகளும் நடைபெற்று வருகின்றன. பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கு இப்போதுவரை தனியார் பேருந்து நிறுவனங்களே மினி பேருந்துகளை இயங்கி வருகிறது.  ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பல தனியார் பேருந்து நிறுவனடங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. தற்போது சில வழித்தடங்களில் மட்டுமே தனியார் பேருந்து சேவைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காததால், தங்களால் தொடர்ந்து பேருந்து  சேவைகளை வழங்க முடியாத நிலை இருப்பதாகவும், இதனால் சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியதாகி வருவதாக தெரிவித்துள்ளதுடன்,  தமிழகஅரசு தங்களது  வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கட்டண உயர்வு அனுமதி வழங்கி,  தாங்களும் தொடர்ந்து பணியாற்றும் வகையில், எங்களது தொழிலை முன்னேற்றப் பாதையில், செல்கின்ற சூழ்நிலையை உருவாக்கி தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அன்பான வேண்டுகோள் விடுப்பதாக, தமிழ்நாடு பஸ் உரிமையாளர்களின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.