முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் அவரச சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது நிறைவேறியது.

triple

திருமணமான முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ மூன்று முறை தலாக் சொன்னால் அவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டதாக கருதப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒருசில பெண்கள் தங்கள் கணவர் தொலைபேசி மூலம் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டதாக உச்சநீதிமன்றத்தை நாடினர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.

ஆனாலும், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால், முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் உள்ளது. எனவே, அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-