துஷான்பே:
ஜிகிஸ்தானின் முர்கோப் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

அங்கு 20 நாட்களுக்கும் மேல் மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு துருக்கி- சிரியா எல்லையில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியாகிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களிலும் நில நடுக்கங்கள் பதிவாகியிருந்தன. இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவித்தன. அண்மைக்காலமாக உத்தரகண்டில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து கிழக்கு திசையில்143 கி.மீ. தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் தஜிகிஸ்தான் நாட்டில் முர்கோப் எனும் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் உணரப்பட்டது.

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.0 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். பெரிய கட்டடங்கள் குலுங்கியதால் அங்கு பீதியான மனநிலையே காணப்பட்டது.