விழுப்புரம்:  திண்டிவனம் அருகே உள்ள தியாகத்துருகம் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விடுமுறை அளிக்காமல் தொடர் பணி வழங்கியதால் ஏற்பட்ட பணி சுமை காரணமா அல்லது குடும்ப பிரச்சினையா என   விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு பணிச்சுமையை குறைக்கும் வகையில், வார விடுமுறை, திருமணம் போன்ற முக்கிய நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என டிஜிபி பதவி எற்றதும் அறிவித்தார். இதுதொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், நடைமுறையில் அவ்வாறு ஏதும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில்,  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சேடன்குட்டை தெருவை சார்ந்தவர் நடராஜன் மகன் முருகன்(58), காவல் உதவி ஆய்வாளர். இவரது சொந்த ஊர் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமம் ஆகும். இவருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவி ராணி(56), ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இரண்டாவது மனைவி மேகலா(49), இவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் உதவி ஆய்வாளர் முருகன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவரது தாயார் உயிரிழந்ததால் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனக்கு ஓய்வுகூட தராமல், தொடர்ந்து பணி வழங்கப்பட்டு வந்தால், மேலும் மன வருத்ததில் இருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை , வீட்டில் தங்கியிருந்த  உதவி ஆய்வாளர் முருகனை காணவில்லை என்றதும் அவரது குடும்பத்தினர் வீடு முழுவதும் தேடினர். அப்போது,  மேல்மாடிக்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கம் தாழிட்டு உள்ளது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் வேட்டியில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் பணி சுமை காரணமா?குடும்ப பிரச்சனை காரணமா? என்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.