தினமும் காலை அல்லது மாலை அல்லது இருவேளையும் நடை பயிற்சி மேற்கொள்வது தவிர வார இறுதி நாட்களில் நீண்ட தூரம் – டெஸ்டினேஷன் ஜர்னி – நடந்து செல்வது இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது.

சிலர் குழுவாக சேர்ந்து நடந்து வருவதோடு மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்களையும் நடைப்பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் விதமாக மொபைல் செயலி போன்றவற்றை பயன்படுத்தி தங்களின் சாதனைகளை பகிர்பவர்களின் எண்ணிக்கையும் கூடுதலாகி வருகிறது.

எந்த விதமான முறையான பயிற்சியின்றி நீண்ட தூர நடைப்பயிற்சியில் திடுதிப்பென இறங்கும் சிலர் அதனால் ஏற்படும் தசை பிடிப்பு, மூட்டு வலி போன்ற கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

நீண்ட தூரம் தொடர் நடைபயணம் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கான வலிமை மற்றும் சகிப்புத்தன்மை ஏற்படும் அதேவேளையில் அதனால் ஏற்படும் உடல் அசௌகரியங்களை தவிர்க்க சில நடைமுறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

1. நடக்கும் போது முதுகை முன்புறமோ அல்லது பின்புறமோ வளைந்து நெளிந்து நடக்காமல் நெஞ்சை நேராக நிமிர்த்தி நடக்க வேண்டும்.

2. இரண்டு கால்களுக்கும் இடையில் இடுப்பளவு தூர இடைவெளி இருக்க வேண்டும்.

3. கால்விரல்கள் முன்னோக்கி நேராக இருக்கவேண்டும். (பக்கவாட்டில் வளைந்து திரும்பி இருக்கக்கூடாது)

4. கண்களின் பார்வை 10 அல்லது 20 அடி தூரத்தை நோக்கி இருப்பது அவசியம். (இது உங்கள் கன்னம் தரைக்கு இணையாக இருப்பதைக் குறிக்கும்)

5. முதுகை வில்போல் வலைப்பதைத் தவிர்க்கவும்.

6. நடக்கும் போது முக்கிய தசைகளுக்கு வேலை கொடுக்க மூச்சை சற்று இழுத்து வயிற்றை சுருக்கவும். (அசௌகரியமாக இருக்கும் போது இதை செய்யதீர்கள்)

7. அவ்வப்போது தோள்களை தளர்த்திவிடுங்கள்.

வேகமாக எட்டி நடப்பதை தவிர்த்து சிறுநடையாக செல்வது இடுப்பு, முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களை பாதுகாக்க சிறந்த வழி.

நடக்கும் போது கைகள் தவிர உடம்பின் மற்ற அனைத்து பகுதிகளும் இயங்கும் என்பதால் கைகளை சீரான இடைவெளியில் ஒவ்வொன்றாக தோள் உயரத்திற்கு உயர்த்தி லேசாக முன்னும் பின்னும் சுற்றுவது நல்லது.

தவிர, சரியான காலணிகளை அணிவதன் மூலம், நீண்ட தூரம் நடப்பதால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தைத் தடுக்கலாம்.

வெவ்வேறு வகையான காலணிகளை முயற்சி செய்து பார்த்து காலணிகள் தளர்வாக இல்லாமல் பேட்கள் பயன்படுத்தி பிடிப்பாக வைப்பது அவசியம். நீண்ட தூரம் நடைப்பயணத்தை துவங்கும் முன் சில மணிநேரங்கள் அந்த காலணியை பயன்படுத்தி அதன் தன்மையை உறுதிசெய்வது நல்லது.

நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடல் மற்றும் தசை பிடிப்பு ஏற்பட்டால் உங்கள் உடற் பயிற்சியாளர், பிஸியோதெரபிஸ்ட் அல்லது மருத்துவரை ஆலோசிப்பது மிகவும் அவசியம்.