நாக்பூர்: பிரதமர் மோடியின் கொள்கைகள் பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக விரோதம் மற்றும் அரசியல் சர்வாதிகாரத்தை உருவாக்கும்  நாட்டை உடைக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் பொதுச்செயலாளருமான  ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.  ராகுலின் இன்றைய யாத்திரையில் பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு, விளம்பரம் மற்றும் ஊடகத் துறையின் பொதுச் செயலாளரான ஜெய்ராம்  ரமேஷ், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின்போது மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள நாசர்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக விரோதம் மற்றும் அரசியல் சர்வாதிகாரத்தை உருவாக்குகின்றன, இது எதிர்காலத்தில் நாட்டை உடைக்கும் என்று அச்சம் தெரிவித்தவர், அது நடக்காமல் இருக்கவே ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

2020ல் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசை விட்டு வெளியேறியதற்கான காரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரமேஷ், மத்திய அமைச்சராக பதவியேற்பதற்காகவும், தேசிய தலைநகரில் உள்ள 27, சப்தர்ஜங் ரோடு பங்களாவை திரும்ப பெறுவதற்காகவும் தான் கட்சியை விட்டு விலகுவதாக கூறினார். “இதற்குப் பின்னால் வேறு எந்த நோக்கமும் இல்லை,” என்று அவர் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.

ராகுல்காந்தியின் இந்த யாத்திரை டிசம்பர் 24 ஆம் தேதி டெல்லியை சென்றடையும் என்றும், அங்கு ஐந்து நாட்கள் இடைவெளி எடுக்கப்படும் என்றும் கூறியவர்,  யாத்திரையுடன் ஓடும் வாகனங்கள் மற்றும் கன்டெய்னர்கள் முன்னோக்கி செல்லும் பயணத்திற்கு சர்வீஸ் செய்ய வேண்டியிருப்பதால் இடைவேளை அவசியம், என்றார். ராகுலின் யாத்திரை  ராஜஸ்தானில் நுழைந்ததும் அல்வார் நகரில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றார்.

முன்னதாக இன்று  காலையில் மீண்டும் யாத்திரையைத் தொடங்கிய பிறகு, காந்தியும் அவரது பரிவாரங்களும் நாசர்பூர் கிராமத்தில் நிறுத்தப்பட்டனர். இன்றைய யாத்திரையின் போது, அவருடன் பிரியங்கா காந்தி, கமல்நாத் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த யாத்திரை மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்கு காடியா பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள கோஸ்லா ஃபதா ரூபாகேடி ஜோட்டை சென்றடையும். இந்த யாத்திரை மாவட்டத்தில் உள்ள ஜலாரா கிராமத்தில் இரவு தங்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ராகுல் காந்தி தலைமையிலான அணிவகுப்பு அண்டை மாநிலமான மகாராஷ்டிராவிலிருந்து புர்ஹான்பூர் மாவட்டத்தில் நவம்பர் 23 அன்று மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைந்தது. மத்தியப் பிரதேசத்தில் இதுவரை நடந்த பயணத்தில் பாதிக்கு மேல் முடித்துள்ளது. புர்ஹான்பூர், கந்த்வா, கர்கோன் மற்றும் இந்தூர் மாவட்டங்கள் வழியாக காந்தி தலைமையிலான அணிவகுப்பு இதுவரை சென்று தற்போது உஜ்ஜைன் மாவட்டம் வழியாக நகர்கிறது.  உஜ்ஜயினி வழியாகச் செல்லும் போது, ​​காந்தி நாட்டிலுள்ள 12 ‘ஜோதிர்லிங்க’ தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற மகாகல் கோவிலுக்குச் சென்றார். அதற்குமுன், அவர் கந்த்வா மாவட்டத்தில் உள்ள மற்றொரு ‘ஜோதிர்லிங்’ தலமான ஓம்காரேஷ்வர் கோவிலிலும் வழிபட்டார்.

கட்சி அறிவித்த பயணத்திட்டத்தின்படி, டிசம்பர் 4-ம் தேதி ராஜஸ்தானுக்குள் நுழைவதற்கு முன், 12 நாட்களுக்குள் மேற்கு மத்தியப் பிரதேசத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மால்வா-நிமர் பகுதியில் 380 கி.மீ தூரத்தை பாத யாத்திரை மேற்கொள்கிறது.