சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசியோடு பிளாஸ்டிக் அரிசியை கலந்து விநியோகம் செய்து இருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், மக்களின் உயிரோடு விளையாடுவதை திமுக நிறுத்த வேண்டும் என சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே கடம்பன்குளம் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்  இலவச அரிசி வித்தியாசமாக காணப்பட்டது.  இந்த அரிசியானது சுண்ணாம்பு கட்டி போன்ற அடர் வெள்ளை நிறத்தில் பளிச்சென்று இருந்ததாக பொதுமக்கள் புகார் கூறினர். மேலும் . சிலருக்கு புழுங்கல் அரிசியுடன் அடர் வெள்ளை நிற அரிசியும் கலந்து வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதை கண்ட பொதுமக்கள், ரேஷன் அரிசியுடன் பிளாஸ்டிக் அரிசி கலந்து இருப்பதாக புகார் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ங்குநேரி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி மற்றும் அதிகாரிகள் கடம்பன்குளத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அடர் வெள்ளை நிறத்திலான அரிசியானது செறிவூட்டப்பட்ட அரிசி என்றும், ஊட்டச்சத்து மிகுந்த இந்த அரிசியில் 3 வகையான வைட்டமின்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு உள்ளது என்றும், நாங்குநேரி நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து வருகிற ஏப்ரல் மாதத்தில் வினியோகம் செய்வதற்காக வைத்திருந்ததை தவறுதலாக முன்கூட்டியே விற்பனைக்கு அனுப்பியதும் தெரியவந்தது.  இதையடுத்து அந்த அரிசிக்கு பதிலாக பொதுமக்களுக்கு மாற்று அரிசி வழங்க ஏற்பாடு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மக்கள் உயிரோடு விளையாட வேண்டாம் என திமுக அரசுக்கு சசிகலா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளத்தில் ராமானுஜன் கூட்டுறவு பண்டக சாலையின் கீழ் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருவதாகவும், கடம்பன்குளம், பிள்ளைகுளம், எடுப்பூர், எடுப்பல் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய சாமானிய மக்கள், இந்த ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்ற நிலையில், கடம்பன்குளம் ரேஷன் கடையில் கடந்த 19ஆம் தேதி விலையில்லா அரிசி வழங்கப்பட்டுள்ளது, அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டவர்களுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சாப்பாட்டில் ஏற்பட்ட குளறுபடியே வயிற்றுவலிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் ரேஷனில் வழங்கப்பட்ட அரிசியால் வயிற்று வலி ஏற்பட்டு இருக்குமா? என்ற சந்தேகத்தில் அவற்றை பார்த்த போது பிளாஸ்டிக் அரிசிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011ஆம் ஆண்டு மீண்டும் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டவுடன் முதல் உத்தரவாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்திற்கு கையெழுத்திட்டு, அதனை வெற்றிகரமாகவும் செயல்படுத்தினார். தமிழக ஏழை எளிய சாமானிய மக்களும் இதனால் மிகப்பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து 20 மாதங்களை கடந்து விட்ட நிலையில், ஏழை எளிய சாமானிய மக்களுக்கு வழங்கப்படுகின்ற ரேஷன் அரிசியில் விஷத்தை போன்று பிளாஸ்டிக் அரிசியை கலந்து இருப்பது யாராலும் மன்னிக்கமுடியாதது. தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரசுக்கு சொந்தமான அரவை மில்களில் அரவை செய்து அரிசியாக்கி பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யும்போது, எவ்வாறு பிளாஸ்டிக் அரிசி ரேஷன் கடை அரிசிகளில் கலந்து இருக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

இதற்கு காரணமானவர்கள் யார்? இந்த ஆட்சியாளர்களின் கவனத்திற்கு வந்ததா? இல்லை அவர்களுக்கு தெரிந்தே நடக்கிறதா? திமுக ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் இருப்பதை பார்க்கும் போது இதில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார்கள்.

ஏற்கனவே, சொத்துவரி உயர்வு, ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்று தமிழக மக்களை கசக்கி பிழியும் திமுக ஆட்சியாளர்கள், தற்போது ரேஷன் அரிசியிலும் பிளாஸ்டிக் அரிசியினை கலந்து ஏழை எளிய சாமானிய மக்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், திமுக ஆட்சியாளர்கள் ஓட்டுப்போட்ட மக்களை தொடர்ந்து துன்புறுத்துவதை விட்டுவிட்டு இனிமேலாவது அவர்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.

இதுபோன்று ரேஷன் கடைகளில் உள்ள அரிசியோடு, பிளாஸ்டிக் அரிசியை கலந்தது எப்படி? இதற்கு யார் காரணம்? என்பதை முறையாக விசாரணை செய்து, இந்த மன்னிக்கமுடியாத தவறு இழைத்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.