செஞ்சுரியை நோக்கி செல்லும் பெட்ரோல் டீசல் விலை: மோடி அரசுமீது பொருளாதார நிபுணர்கள் குற்றச்சாட்டு

சென்னை:

பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.100 தாண்டும் நிலை உருவாகி உள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

மோடி அரசின் பொருளாதார கொள்கை காரணமாகவும்,  தொடர் பொருளாதார வீழ்ச்சி காரணமாகவுமே பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

பாரதியஜனதா ஆட்சி பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் வரலாறு காணாத அளவில் ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கிறது. இது பொதுமக்களி டையே குறிப்பாக பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் சமயத்தில் சுமார் 1 மாத காலம் பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகளை உயர்த்தாமல் கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, கர்நாடக சட்டமன்ற தேர்தல்  முடிவடைந்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தியது. தற்போது  வரலாறு காணாத அளவுக்கு தினசரி அதிகரித்து வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடு முழுவதும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.  ஆனால், மத்திய அரசோ மக்களின் கஷ்டத்த கண்டுகொள்ளாமல் பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி உள்ளது.

கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டிய நிலையில், தினசரி விலை உயர்வு காரணமாக இன்று ரூ. 84.05 பைசாவாகவும், டீசல் விலை ஞரு. 77.13 பைசாவாகவும் உள்ளது. நேற்றைய விலையை விட இன்றைய விலை லிட்டருக்கு பெட்ரோல் 14 காசுகளும், டீசல் 15 காசுகளும் உயர்ந்து உள்ளது. இது பொதுமக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நி்ர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலை மாதம் இருமுறை என மாற்றி அமைக்கப் பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு  பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து , கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய தொடங்கின.

இதையடுத்து, தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.02-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 80 ரூபாயை தாண்டி உள்ளது.

இதற்கு காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதாலும், துருக்கி போன்ற வெளிநாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை என்றும் கூறப்படுகிறது. ஆனால்,   இந்தியாவின் பொருளாதார கொள்கை காரணமாகவும்,, தொடர் பொருளாதார வீழ்ச்சி காரணமாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதே நிலையில் விலை ஏற்றம் சென்றால், இன்னும் சில நாட்களில்   பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டி செஞ்சுரி அடிக்கும் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.

நாட்டிலேயே அதிக அளவில் பெட்ரோல், டீசல் விற்பனையாகும் மாநிலமான மகாராஷ்டிராவின் மும்பையில்தான் முதலில் பெட்ரோல் விலை ரூ 100ஐ தொடும் என்றும் கூறியுள்ளனர். இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மோடி அரசின் கையாலாகாத தனத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றை அமல்படுத்தி நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடித்த மோடி அரசு தற்போது, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மறுத்து மீண்டும் மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது. 
English Summary
Petrol price hike towards Century: Economic experts allegation on Modi government