சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் திராவிட கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.

ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு  ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விஷயத்தில் முடிவு எடுக்காத அப்போதைய ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த  தஞ்சை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றியும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார். தமிழக அரசு அனுப்பியுள்ள கோப்புகளுக்கு உரிய கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்துகிறார்.

ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தின் கீழ் தலைவர் பதவி என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியது. அதையும் மீறி அவர் தலைவராக உள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார் என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாகவே, தமிழக ஆளுநருக்கும், ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஆளுநருக்கு எதிராக புகார் மனு ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.