அவுரங்காபாத்,

த்தியில் பாரதியஜனதாவை மக்கள் ஆட்சியில் அமர்த்தியது, முத்தலாக் சட்டம் இயற்ற அல்ல. ராமர் கோவில் கட்டுவதற்காகத்தான் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அவரங்கபாத் வந்துள்ள தொகாடியா அவுரங்கபாத் மற்றும் பர்பானி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் அவுரங்கபாத்தில்  செய்தியாளர்களை சந்தித்த  அகில இந்திய விசுவ இந்து பரிஷத் தலைவரான பிரவின் தொகாடியா கூறியதாவது,

அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கட்டுவதற்கு அதிகாரம் அளித்தே பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான  பா.ஜ.க.வை மக்கள் ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், அவர்கள் முத்தலாக் சட்டம் இயற்றுவதிலேயே குறியாக உள்ளனர். மக்கள் அந்த சட்டம் இயற்றுவதற்காக அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.

அயோத்தியில் ராமர்  கோவில் கட்டுமானத்திற்கான வழிவகுக்கும் ஒரு சட்டத்தை மத்திய  அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

ராமர் கோவில் கட்டப்படும்போது, அதன் அருகில் மசூதி இல்லாத வகையில் கட்டப்பட வேண்டும் என்றும், அதற்காக சட்டம் இயற்றப்பட வேண்டும்.

மேலும், ராமஜென்ம பூமி பிரச்சினையில் நாங்கள் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். ராம் ஜென்ம பூமி-பாபர் மசூதி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மறுபடியும் விசாரணையை  தள்ளி வைத்து விட்டது.

வர உள்ள மார்ச் 14ந்தேதிய விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான அமர்வு தங்களது முறையீடுகளை கேட்கும் என்று நம்புவதாக கூறினார்.

மக்கள் “நீண்ட காலமாக, அயோத்தியில் ராமர் கோவிலுக்காக காத்திருக்கிறார்கள். எனவே அது கட்டப்பட வேண்டும்”.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரவின் தொகாடியா பயணத்தை தொடர்ந்து அவுரங்கபாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரண்டு டிசிபி மற்றும் 5 ஏசிபி, 17 ஆய்வாளர்கள் தலைமையில் 700 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பிரவின் தொகாடியாவின் இந்த பேச்சு பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.