சென்னை: இஸ்ரேலின் பெகாசஸ் மென்மூலம் ராகுல்காந்தி உள்பட அரசியல் கட்சித் தலைவர்களன் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் கண்டித்து, வரு  22ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறும் என மாநிலத் தலைவர் அழகிரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் இந்திய பாதுகாப்புப் படை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்ட சட்ட விரோதச் செயல், பா.ஜ.க. அரசு மீதான சந்தேகத்தையும் மோசமான நடவடிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது அலுவலக ஊழியர்களின் செல்போன்களும் ஹேக் செய்யப்பட்டு வேவு பார்க்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது பெகாஸஸ் ஸ்பைவேர் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் இந்த மென்பொருள் பல நாடுகளின் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் செல்போன்களை ஹேக் செய்து வேவு பார்க்க மத்திய அரசும், அதன் ஏஜென்ஸிகளும் ஸ்பைவேரை வாங்கியது தெளிவாகத் தெரிகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நீதி விசாரணை நடத்தக் கோரியும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து அமித்ஷாவை விலகக் கோரியும் நாடு முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் வரும் ஜூலை 22 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் மாளிகை வரை நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில், கட்சியின் மூத்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.