பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டில்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன்  நிறைவு பெற்றது. அதைத்தொடர்ந்து இரு அவைகளும்  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம்  29-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வரை இரு அமர்வுகளாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தொடரின்போது, காவிரி விவகாரம், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து போன்ற கோரிக்கைகள் காரணமாக சபை அமளிதுமளி பட்டது. இதன் காரணமாக இரு அவைகளும், இரண்டு அமர்வுகளிலும் முறையாக நடைபெற வில்லை.

இதையடுத்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜுலை 18-ம் தேதியன்று கூடியது. முன்னதாக அனைத்துக்கட்சி தலைவர்களை அழைத்து, மழைக்கால கூட்டத்தொடர் அமைதியாக நடைபெற  ஒத்துழைக்க வேண்டும் என்று பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வேண்டு கோள் விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 18ந்தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடர் இன்றுடன் (ஆகஸ்டு 10ந்தேதி) 18 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.

இந்த கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 125 வாக்குகளும், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 325 வாக்குகளும் பதிவாகின.

இந்த நிலையில் இன்று கடைசிநாள் கூட்டத்தில் முத்தலாக் சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்தியஅரசு முயற்சிமேற்கொண்டது. மாநிலங்களை உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தின்மையால்,  முத்தலாக் மசோதா தாக்கல் செய்வதை மத்திய அரசு ஒத்தி வைத்தது.

இந்த நிலையில்,  கடந்த ஜுலை 18-ம் தேதி முதல் நடைபெற்று வந்த  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Parliament's Monsoon Session finished today
-=-