டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நியமன எம்.பி இளையராஜாவின் வருகைப் பதிவு தொடர்பான தகவல்களை நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், நடைபெற்று முடிந்த  குளிர்கால கூட்டத் தொடரில் இளையராஜா எம்பி ஒருநாள் கூட மாநிலங்களவைக்கு செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடந்தது.   13 நாட்கள் நடந்த இந்த குளிர்கால கூட்டத் தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதில், இசையமைப்பாளர் இளையராஜா,  தடகள வீராங்கனை பிடி உஷா,  பிரபல இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

நியமன எம்பிக்களில் பிடி உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத் தொடரிலும் பங்கேற்றிருக்கிறார் .  ஒரு விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறார் . வீரேந்தர் ஹெக்டே 5 நாட்களும்,  விஜயேந்திர பிரசாத் இரண்டு நாட்களும் இந்த கூட்டத் தொடரில் பங்கேற்று உள்ளார்கள்.  இசையமைப்பாளர் இளையராஜா இந்த கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பங்கேற்கவில்லை . அவரது வருகைப்பதிவு பூஜ்ஜியமாக இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.