பரியேறும்பெருமாள் சாதிய அடக்குமுறையின் எதிர்வினை

கட்டுரையாளர்: துரை.நாகராஜன்

பரியேறும்பெருமாள் தென்மாவட்டங்களில் நிகழும் ஆணவக் கொலைகளையும், அதன் பின்னால் உள்ள சாதியக் கோட்பாடுகளையும் வன்முறைப் பாதையை தவிர்த்து அறத்தின் வழியில் அணுகியிருக்கும் உலகத்தரம் வாய்ந்த நேர்மையான கலைப்படைப்பு. வணிகம் தாண்டிய சமூக அக்கறையோடு இந்தப்படத்தை தயாரித்த பா.இரஞ்சித், இயக்குநர் மாரிசெல்வராஜ் இருவருமே பாராட்டுக்குரியவர்கள். படத்தில்கலை நேர்த்தியும், அது தாங்கி நிற்கும் பேருண்மையும் வணிக வெற்றியையும் பெற்றுத்தந்திருக்கிறது.

periyrum

கதாநாயகன் ஆசையோடு வளர்க்கும் நாயையும், ஆணவக் கொலைக்கு ஆளாகும் இளைஞர்களையும் கொண்டு சாதியவன் முறையை காட்சிப்படுத்தும் நேர்த்தியும், கோட்டாவில் வந்தவனை விட மற்றவன் எதிலும் உசத்தியில்லை என்பதை நிரூபிக்கும் ஆங்கில வகுப்பறை காட்சியும் வலியைத் தாண்டிய கவித்துவ பதிவு. பேருந்தில் கதாநாயகனுக்கு தன் அருகிலே இடம்கொடுக்கும் முதியவர், அவன் தாழ்ந்த சாதிக்காரன் என்று தெரிந்ததும் எழுந்து கொள்ளும் போது நுட்பமாகவும், கதாநாயகனின் தந்தையின் வேட்டியை உருவி ஓட விடுகிறபோது பகிரங்கமாகவும் சாதியத்தின் வெறியாட்டத்தை வெளிப்படுத்தும் பாங்கு அபாரம்.

எதார்த்தம் மீறாத காட்சி அமைப்புகள், கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு, இசையில் தெறிக்கும் மண்வாசம் என வழக்கமான தமிழ்த் திரைப்படத்தில் இருந்து தனித்து தெரிகிறது பரியேறும் பெருமாள். ஆதிக்கசாதியினராக அறியப்படுபவர்கள், கீழ்சாதியினராக அறியப்படுபவர்களைநாயினும் கீழ்மையாக நடத்துகிறவரை இங்கு எதுவுமே மாறாது என்று கதாநாயகன் சொல்கிறபோது, படம் பார்க்கும் நம்முடையமனது, ஆதிக்க சாதியினர் மாற வேண்டும் என்று விருப்பம் கொள்கிறது. கூடவே சில கேள்விகளையும் எழுப்புகிறது.

நமக்கும் மேலே இருப்பவர்களிடம் சமத்துவத்தை நாம் எதிர்பார்ப்பது எந்த அளவுக்கு நியாயமோ அதே அளவுக்கு உரிமையை நமக்கு கீழே இருப்பவர்களுக்கு நாம் கொடுக்கத் தயாராக இருக்கிறோமா?

சாதியின் பெயரால் சக மனிதனை ஒடுக்கும் ஆதிக்க சாதியினர் பட்டியலில், உங்கள் சாதியும் என் சாதியும் இருக்கிறது என்பதைஅ றிவீர்களா?

சாதியத்தால் வதைப்பவர்களாக இருக்கும் நாமே வதைபடுபவர்களாகவும் இருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

periyerum

‘ நீ என்னை அடிமை என்று நினைக்கும் போது உன்னைக் கொல்லும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என்கடமை ’ என்கிறார் அம்பேத்கர். ஆனால் நாமோ அடித்தவனை திருப்பி அடிப்பதைவிடவும், தனக்கு கீழ்நிலையில் இருப்பவர்களை ஒடுக்குவதாக வேசாதியம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் முற்பட்டசாதி பிற்பட்டசாதியை அடித்தால் பிற்பட்ட சாதி பட்டியல் சாதியை அடித்து வன்மம் தீர்த்துக் கொள்கிறது.

தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் 443 சாதிகள் இடம் பெற்றுள்ளன. முற்பட்டசாதிகள், பிற்பட்டசாதிகள், மிகவும்பிற்பட்டசாதிகள், சீர்மரபினர், பட்டியல்சாதிகள், பட்டியல் பழங்குடியினர் என வகைப்படுத்தப்பட்டிருக்கும் சாதியப்பட்டியலில் 443வது இடத்தில் இருக்கின்ற சாதியினருக்கு அவர்களுக்கு மேலே இருக்கின்ற 442 சாதிகளும் ஆதிக்கச் சாதிகளாக வேவலம் வருகின்றன. இதில் எந்த சாதியிடம் நாம் முதல் மாற்றத்தை எதிர்பாக்கிறோம்? சாதியவன் முறைக்கு எதிராகநாம் அனைவருமே மாற வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மேல் சாதிக்காரர்களாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், இப்போதெல்லாம் சாதி பேதம்பார்ப்பதில்லை என்பது போலவும், பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும், பட்டியல் சாதியினருமே இன்றைய சாதியவன்முறை நிகழ்வுக்கு காரணம் என்பது போலவும் ஒரு தோற்றம் பொதுப்பரப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு வலிமை சேர்ப்பது போல, மதுரை மாவட்டத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் இரட்டை குவளை முறை இருப்பது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. நிச்சயம் இது அநீதி தான். கண்டிக்க.. தண்டிக்கப் பட வேண்டியது தான்.

fblstdmyka

ஆனால்..ஏதோ ஒரு கிராமத்தில் தேநீர் கடையில் தீண்டாமையை அரங்கேற்றியவர்களும் அதைக் கண்டு கொதித்தெழுந்தவர்களும் கோயில் கருவறைக்குள் நுழைய முடியாத தீண்டத்தகாதவர்களாகத் தான் இன்னமும் இருக்கிறோம். நம்முடைய போராட்டம் எங்கோ மறைவில் நடக்கும் இரட்டைக் குவளைமுறைக்கு எதிராகமட்டுமல்ல, எங்கும் நிறைந்திருக்கும் ஆலயத்துக்குள் நுழைந்து நம் கடவுளை நம் தாய்மொழியில் அழைத்து அருகிலிருந்து வழிபட முடியாததற்காகவுமாக இருக்க வேண்டும். நீங்கள் கும்பிடும் சாமியை நீங்களே குளிப்பாட்டி, குங்குமம் மஞ்சள்பூசி வழிபடும் உரிமையை கேட்டுப்பாருங்கள். அப்போது உண்மையான சாதியவன் முறை எப்படி இருக்கும் என்பதையும், இந்த நாட்டில் சட்டமும், நீதியும் யாருக்காக இருக்கிறது என்பதையும் கண்டு கொள்வீர்கள்.

வாக்களிப்பவர்களும், ஆள்பவர்களும் நாமாக இருக்கிறோம். நம்மை இயக்குபவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள். அதனால் தான், தமிழன் அடையாளத்தோடு இருக்கும் கருணாசை கைது செய்ய முடிகிற காவல்துறைக்கு ஆரிய அடையாளம் தாங்கிய எஸ்.வி.சேகரையும், எச்.ராஜாவையும் கைது செய்ய முடியவில்லை. முடியாட்சி காலம் முதல், குடியாட்சிகாலம் வரை ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கும் சக்தியாக ஆரியம் இருக்கிறது.

நாம் மீட்டெடுக்க விரும்பும் சாதிய விடுதலை ஆரியத்திடமிருந்து தொடங்கப்பட வேண்டும். அதற்கான முன்னோட்டமாக பரியேறும் பெருமாள் காட்சி தருகிறார். எல்லா குழந்தைகளும் சாதியையும், மதத்தையும் சுமந்து கொண்டே பிறக்கின்றன. மதம் மாறிக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கும் அரசு சாதிமாறிக் கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தித் தந்தால் சாதிய அடுக்குகளை நீக்கி எல்லோரும் சமநிலையாகி விட முடியும். ஒரேயொரு சட்டத்தின் மூலம் அரசாங்கத்தால் இதை செயல்படுத்தி விடமுடியும்.

ஆனால், மேல்சாதியினரால் இயக்கப்படும் அரசாங்கம் ஒருபோதும் இதற்கு ஒத்துக் கொள்ளாது. இடஒதுக்கீட்டை குறைப்பதற்கும், அதை அறவே நீக்குவதற்கும் தயாராக இருக்கிற அரசு அதற்கு காரணமாக இருக்கிற சாதிய அடையாளத்தை நீக்கத் தயாராக இல்லை. நம்மை நாமே அடித்துக் கொள்ளும் ஆயுதமாக சாதி பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. நம்முடைய ஒற்றுமையால் மட்டுமே தமிழ் இனத்தையே வீழ்த்திக் கொண்டிருக்கும் ஆரியத்தை அப்புறப்படுத்த முடியும். அதற்கு நமக்குள்ளே ஒருபுரிதல் ஏற்பட வேண்டும். நீயும் நானும் தமிழன் என்கிற ஒற்றுமை சாதியம் தாண்டி வளர வேண்டும். அதற்கான வீரிய விதையை விதைத் திருக்கிறது பரியேறும் பெருமாள். அதை வளர்த்தெடுப்பதில் பரியேறும் பெருமாளின் சமூக வெற்றி அடங்கியிருக்கிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-