போர்பந்தர்:
குஜராத்தில் தேர்தல் பணியில் இருந்த சக துணை ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வரும் டிச.1 மற்றும் டிச. 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், டிச.8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

குஜராத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தீவிர ஓட்டு வேட்டை நடந்து வருகிறது. தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், குஜராத்தில் உள்ள போர்பந்தர் அருகே தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு இடையே திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சக வீரர்களை நோக்கிப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரே துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் இரண்டு துணை ராணுவப் படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தை போர்பந்தர் கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.சர்மா உறுதி செய்துள்ளார். அவர்களுக்குள் என்ன வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் இந்த மோதலுக்குக் காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.