சென்னை; பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட நாள் இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழாவை முன்னிட்டு பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் துவங்க முக்கிய காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர்,மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர் உள்ளிட்டோர்  திருவுருவப்படத்திற்கு  செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்  தமிழக அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள மஹாராஜா மஹாலில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழாவை முன்னிட்டு இன்று  பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் துவங்க முக்கிய காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.கே.பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பொள்ளாச்சி நா.மகாலிங்கம், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர் கே.எல்.ராவ் ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையயடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன்,  கொங்கு மண்டலத்தில் முக்கியமான பெரிய பாசன திட்டம் பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டமாக திகழ்கிறது. பொள்ளாச்சி பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் இருந்த திரு.வி.கே.பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பொள்ளாச்சி நா.மகாலிங்கம், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர் கே.எல்.ராவ் ஆகியோர்களின் தொடர் முயற்சியாலும், அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களால் 7.10.1961 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தற்பொழுது இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அருகில் உள்ள கேரளா மாநிலத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். வீணாக கடலில் கலக்கும் தண்ணீ ரை தடுத்து, மலைகளை குடைந்து, இரு மலைகளை இணைத்து கால்வாய் வழியாக தண்ணீரை பாசனத்திற்காக ஆழியாறு, திருமூர்த்தி அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நீர்வளம் – நீர்மேலாண்மை – அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினர் பெறும் வகையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக் -7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும்! திட்டத்தை நிறைவேற்றிய பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மூத்தோரை நினைவு கூர்வோம்!’ என பதிவிட்டுள்ளார்.