பழனி:  கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. அதன்படி, மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் ஒருவழிப்பாதையாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 முருகப்பெருமானின் அவதார சிறப்பை விளக்கும் வகையில்,  கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா 7 நாட்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  டிசம்பர் 30ந்தேதி விழா தொடங்கிய நிலையில், டிசம்பர் 6ந்தேதியுடன் முடிவடைகிறது.

தீபத்திருவிழாவையொட்டி, தினசரி சாயரட்சை பூஜைக்கு பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பிறகு தங்கரத புறப்பாடும் நடைபெற்று வருகிறது.  திருவிழாவின் 6-ம் நாளான அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு வரப்பட்டு மூலவர் சன்னதியில் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கார்த்திகை மகாதீபம் 6ந்தேதி அன்று ஏற்றப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, உடன் விஸ்வரூப தரிசனம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 4 மணிக்கு சாய ரட்சை பூஜையும் நடக்கிறது. அதன்பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனையை தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றுதல், மாலை 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து உபகோவில்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், லட்சுமி நாராயணப்பெருமாள், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்றைய தினத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் ஒருவழிப்பாதையாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மேலும், அன்றைய தினம் மலைக்கோயிலில் பக்தர்களின் கூட்டத்தினை ஒழுங்குபடுத்தும் பொருட்டு மலைக்கோயிலுக்கு செல்லும் வழியான குடமுழுக்கு நினைவரங்கம் பிற்பகல் 2.00 மணியளவில் தற்காலிகமாக அடைக்கப்பட்டு, மாலை 6.00 மணிக்கு மேல் மீண்டும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மின்இழுவை இரயில் (Winch), கம்பிவட ஊர்தி (Ropecar) வழக்கம் போல் செயல்படும்.

திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு செவ்வாய்கிழமை அன்று ஒருநாள் மட்டும் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மலைக்கோயிலில் தீபம் ஏற்றியபின் அருள்மிகு குழந்தைவேலாயுதசுவாமி திருக்கோயில் (திருஆவினன்குடி), அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில் களில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.