இந்தியாவில் தற்போது துவங்கியிருக்கும் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பை பாகிஸ்தான் அரசு தடைசெய்திருந்தாலும், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், போட்டிகளைக் காணும் வகையில், சமூக வலைதளங்களில் புதிய வழிகளைக் கண்டறிந்து வருகிறார்கள்.

கடந்த 2008ம் ஆண்டு முதலே, ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பில்லை என்றாலும்கூட, அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தீவிர ஐபிஎல் பிரியர்களாகவே இருந்து வருகிறார்கள்.

ஆனால், புலவாமா தாக்குதலின் விளைவாக இருநாடுகளுக்கும் ஏற்பட்ட மோதல்களையடுத்து, தற்போது நிலைமை மோசமடைந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளின்போது, தனது தயாரிப்புக் குழுவை, இந்திய நிறுவனம் பாதியிலேயே திரும்பப் பெற்றுக்கொண்டதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாக, தற்போது ஐபிஎல் ஒளிபரப்பை பாகிஸ்தானில் மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், மனம் தளராத பாகிஸ்தானின் ஐபிஎல் ரசிகர்கள், போட்டிகளை காணும் வழிகளை சமூகவலைதளங்களின் மூலமாக கண்டறிந்து வருகிறார்கள்.

– மதுரை மாயாண்டி