இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை அடுத்து கீரவாணியின் ரசிகர்களை விட இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தெலுங்கு மற்றும் இந்திய திரையுலகைத் தாண்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் எம்.எம். கீரவாணியின் இந்த சாதனையை பாராட்டி வருகின்றனர்.

கீரவாணி – சந்திரபோஸ்

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெரும் இரண்டாவது இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ள கீரவாணி 1990 ம் ஆண்டு மௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘மனசு மமதா’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

1991 ம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘அழகன்’ திரைப்படத்தில் முதல் முதலாக தமிழில் இசையமைத்த கீரவாணி, தமிழ் படங்களுக்காக தனது பெயரை மரகதமணி என்று மாற்றிக்கொண்டு தொடர்ந்து ‘வானமே எல்லை’, ‘ஜாதிமல்லி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

1992 ம் ஆண்டு பாலச்சந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான் 2009 ம் ஆண்டு வெளியான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு இசையமைத்ததற்காக ஆஸ்கர் விருது பெற்றார்.

ஏ.ஆர். ரஹ்மான்

தற்போது மரகதமணி எனும் எம்.எம். கீரவாணி ஆஸ்கர் விருது பெற்றதை அடுத்து பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய இரண்டு இசையமைப்பாளர்களுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ‘காந்தி’ திரைப்படத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் பானு அதையா 1983 ம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்று ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் மற்றும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பானு அதையா

இதனைத் தொடர்ந்து 2009 ம் ஆண்டு ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்கு சிறந்த ஒலிப்பதிவாளருக்கான (சவுண்ட் மிக்ஸிங்) விருது ரசூல் பூக்குட்டிக்கு கிடைத்தது.

அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பாடலாசிரியர் குல்சார் ஆகியோருக்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது.

‘காந்தி’ மற்றும் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ ஆகிய இரண்டு படங்களும் இந்தியாவில் எடுக்கப்பட்ட இந்திய கதைக்களப் படமாக இருந்தாலும் இவை வெளிநாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட படங்களாகும்.

கார்த்திகி கான்சல்வேஸ் – குனீத் மோங்கா

2023ம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப் படம் என்ற ஆஸ்கர் விருது ‘தி எலிபாண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழில் எடுக்கப்பட்ட ‘தி எலிபாண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் இயக்குனர் கார்த்திகி கான்சல்வேஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகிய இரண்டு பெண்களுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது.

இதனை அடுத்து ஆஸ்கர் விருது வாங்கிய முதல் இந்திய தயாரிப்பு படம் என்ற பெருமையை ‘தி எலிபாண்ட் விஸ்பரர்ஸ்’ பெற்றுள்ளதோடு ஆஸ்கர் விருது பெற்ற இந்திய பெண்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

‘நாட்டு நாட்டு’ பாடலை எழுதிய சந்திரபோஸ் 2023ம் ஆண்டு சிறந்த பாடலாசியருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார்.

ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இதுவரை எட்டு இந்தியர்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜித் ரே

இது தவிர, 1992 ம் ஆண்டு வங்காள மொழி பட இயக்குனர் சத்யஜித் ரே-வுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ‘கௌரவ’ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

விவியன் லெ

அதேபோல், 1913ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாகாணத்தின் டார்ஜீலிங்கில் பிறந்த விவியன் லெ என்ற பிரிட்டிஷ் நடிகை ஆங்கிலப் படங்களுக்கான சிறந்த கதாநாயகி விருதை இரண்டு முறை (1939 & 1951) பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.