சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது, ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்ட செந்தில் முருகன் இன்று, எடப்பாடி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து நீக்கப்பட்ட சில மணிநேரத்தில் செந்தில் முருகன் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். இது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியபோது, ஓபிஎஸ் அணி சார்பில், செந்தில் முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, எடப்பாடி தரப்பு வேட்பாளரை தேர்தல் ஆணையம் அதிமுக வேட்பாளராக ஏற்ற நிலையில், ஓபிஎஸ் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.  இதையடுத்து ஓபிஎஸ் அணியில் இருந்து ஒதுங்கியிருந்த செந்தில் முருகனிடம் எடப்பாடி அணி பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் இன்று (பிப்.9)  காலை அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில் செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று அதிமுகவில் இணைந்தார்.

இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் செல்வத்தால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன், ஓ. பன்னீர்செல்வத்தல், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தெற்கு ஒன்றியச் செயலாளராக அறிவிக்கப்பட்ட தளவை சுந்தர்ராஜ் ஆகியோர் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தி னாலும், கழக அமைப்பு செயலாளர் செந்தில் முருகன் கட்சியின் அடிப்படை பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் சற்றுமுன் அறிவித்தார். இந்நிலையில் செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து நீக்கப்பட்ட சில மணிநேரத்தில் செந்தில் முருகன் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். செந்தில் முருகன் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.