கோவை: ஓபிஎஸ்-ன் வலது கையாக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ், ஓபிஎஸ்மீதான அதிருப்தி காரணமாக, அவரை துரோகி என விமர்சித்துவிட்டு, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், அவர் தற்போது திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டு கட்சியை தனது கைக்குள் வைத்துள்ளார். இதை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், ஓபிஎஸ் தனக்குத்தான தொண்டர்கள் ஆதரவு, தனது ஆதரவாளர்களை நியமித்து தனி டிராக் ஓட்டி வருகிறார். ஆனால், அதிமுக சுக்குநூறாக உடைந்துபோயுள்ளது, ஜெயலலிதாவின் நினைவுநாள் அன்று நடைபெற்ற நிலவரங்கள் உறுதி செய்துள்ளன.

இந்த பரபரப்பான சூழலில்தான், ஓபிஎஸ்-ன் வலதுகரமாக செயல்பட்டு வந்தவரும், எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து ஓபிஎஸ்-ன் தோளோடு தோள் நின்று பணியாற்றி வந்தவருமான கோவை செல்வராஜ், அதிமுகவில் இருந்து வெளியேறுவதாக  ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த ஆடியோவில்,    “எடப்பாடி, பன்னீர்செல்வம் இருவரது செயல்பாடுகளை  பார்க்கும்போது, இவர்களோடு சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. அ.தி.மு.க என்ற பெயரில் சுயநலத்துக்காகச் சண்டைபோடுகிற இவர்களுடன் சேர்ந்துகொண்டு நாமும் கட்சியை அழிக்கிற முயற்சியில் ஈடுபடக்கூடாது என முடிவெடுத்து, இன்று முதல் இவர்களிடமிருந்து விலகுகிறேன். ஆனால், நான் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன். திராவிட பாரம்பரியம் எனது உடலில் ஓடுகிற ரத்தம். ஒரு நாளும் அரசியலைவிட்டு விலகமாட்டேன்.

துரோகிகளோடு சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்பது உறுதி. அதிமுகவிலிருந்து என்னை நானே விலக்கிக்கொள்கிறேன். ஜெயலலிதாவைவிடப் பதவிதான் முக்கியம் என நினைத்து, இவர்கள் சுயநலத்துடன் பதவி சுகத்தை அனுபவித்து உள்ளார்கள். ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்து, அவரை உயிரோடு அழைத்து வர இவர்களால் முடியவில்லை. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைப்போல லட்சக்கணக்கான தொண்டர்கள் மனக்குமுறலுடன் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

கோவை செல்வராஜின் ஆடியோ ஓபிஎஸ்-க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  அன்றைய தினமே அவரை  கட்சியிலிருந்து  நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்தார். அவர் வகித்துவந்த கோவை மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து கோவை மாவட்டத்தை  நான்காகப் பிரித்து, நான்கு மாவட்டச்  செயலாளர்களை நியமித்து பன்னீர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் திமுகவில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் திமுகவின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் செயல்பட்டு வரும், அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது முன்னாள் அதிமுக நண்பர்களை திமுகவுக்கு இழுக்கும் முயற்சியில் தூண்டில் போட்டு வருகிறார். இந்த தூண்டிலில் கோவை செல்வராஜ் சிக்கி விட்டதாக கூறப்படுகிறது. கோவை அதிமுகவில் செல்வாக்கு பெற்றவராக எஸ்.பி. வேலுமணி உள்ள நிலையில், அவருக்கு எதிரான கோவை செல்வராஜ் மூலம் அதிமுகவில் பிளவு ஏற்படுத்த கோவை செல்வராஜுக்கு வலை வீசப்பட்டுள்ளது. அந்த வளையில் கோவை செல்வராஜ் சிக்கி விட்டதாகவும், இதையடுத்து, அவர் விரைவில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை செல்வராஜின்திடீர் விலகலுக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது குறித்து ஓ.பி.எஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் கூறியதாவது, கோவை செல்வராஜ்,  “அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் பதவி கேட்டுக் கடந்த ஒருமாதமாகக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார். ஓபிஎஸ்-ஐயே மிரட்டினார். ஆனால், அந்த பதவிக்கு அவர் தகுதியானவர் கிடையாது,  கோவை செல்வராஜ் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் கொண்டவர்,  அவர் மீண்டும் அ.தி.மு.கவிற்கு வரமுடியாது” என்று கூறியுள்ளார்.