சென்னை: “கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும். மேலும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும்” என்று தமிழக அரசின் தொழிற்துறை தெரிவித்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையம், அன்னூர் ஒன்றியங்களில் உள்ள 6 கிராமங்களில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்து, 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தது.

தமிழகஅரசின் இந்த நடவடிக்கைக்கு இதற்கு 6 கிராம ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மாநில பாஜக அங்கு போராட்மும் நடத்தியது. பல அமைப்புகள்  சிப்காட் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணி, நடைபயணம், கடையடைப்பு உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களையும்  நடத்தி வருகின்றன. விவசாயிகள் தொடர் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்து போராட்டங்களில் கலந்து கொண்டன.

இந்த பரபரப்பான சூழலில் அந்த பகுதி கிராமங்களான அக்கரை செங்கப்பள்ளி, குன்னிபாளையம், பச்சாகவுண்டனூர், இலக்கேபாளையம், செலம்பரகவுண்டன்புதூர், தொட்டிய பாளையம், கரியனூர், சொலவம்பாளையம், ஆலாங்குட்டை, கரியாக்கவுண்டனூர், ஒட்டகமண்டலம், இராசடி பொகலூர், ஆனணப்பள்ளிபுதூர், ஆத்திக்குட்டை, குழியூர் மாகாளி அம்மன் கோவில் திடல் பகுதிகளில் நமது நிலம் நமதே என்ற அமைப்பின் மூலம் 17 இடங்களில் போராட்டக்குழு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்புகள் மூலம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் 17 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை ஏற்பட்டால் அந்த பகுதிகளுக்கு பறக்கும் படையினர் விரைந்து சென்று விவசாயிகளுக்கு உதவும் வகையில் வழக்கறிஞர்கள் உள்பட முக்கிய சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, தமிழகஅரசு யாருடைய விவசாய நிலத்தையும் கட்டாயப்படுத்தி கையகப்படுத்தாது என தெரிவித்து உள்ளது.  இதுதொடர்பாக தொழிற்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  தொழில் மற்றும் கல்வி துறைகளில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி, பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் தமிழ்நாடு அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவு எடுத்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், மேற்படி தொழிற்பூங்கா அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு, (அரசு ஆணை எண்.202, தொழில், மு.ஊ (ம) வர்த்தகத் (எம்.ஐ.இ.1) துறை, நாள் 10.10.2022) அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தற்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். அக்கோரிக்கையை கருத்தில் கொண்டும், விவசாய பெருமக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், தற்போது விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும். மேலும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும்.

விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, அவர்களின் நலனிற்காக மட்டுமே செயல்படும். இத்தொழிற்பூங்காவில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும். எனவே, டிட்கோ மூலம் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க தற்போது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.