தாமிரபரணி மகா புஷ்கர விழா: 144ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக தொடங்கியது

நெல்லை: 

தாமிரபரணி படித்துறைகளில் மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்று விழா தொடங்கியதை முன்னிட்டு,  தூத்துக்குடி, திருநல்வேலி மாவட்டங்களில் பாயந்தோடும் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா புஷ்கர விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் தாமிரபரணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் வாழ்வில் வளங்களை சேர்க்கும் நதிகளை இந்துக்கள் கடவுளாக பாவித்து வழிபட்டு வருகிறார்கள். இந்த நதிகளை தெய்வமாக வணங்கி, அதற்க பூஜை செய்து விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி பாவங்களில் பாய்ந்தோறும் புன்னிய நதியான தாமிர பரணி ஆற்றின் மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.

இந்த விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.  வேதவிற்பன்னர்கள் மந்திரம் ஓத, புன்னிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புன்னிய நீரை தாமிரபரணியில் ஊற்றி விழா தொடங்கியது.

குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாவதை தொடர்ந்து, அந்த ராசிக்கு உகந்த தாமிரபரணி ஆற்றில்144 பின் மகா புஷ்கரம் விழா நடத்தப்படுகிறது.

இதற்காக பாபநாசம் முதல் புன்னகாயல் வரையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் 64 தீர்த்த கட்டங்கள், `43 படித்துறைகள் மற்றும் ஆற்றங்கரையோர கோயில்களில்ஆகியவை மகா புஷ்கர விழாவுக்காக புதுப்பித்து கட்டப்பட்டு உள்ளன.  பக்தர்கள் நீராடுவதற்காக  மொத்தம் 29 படித்துறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மகா புஷ்கரத்தையொட்டி, தாமிரபரணியில் நீராட இந்தியா முழுவதும் இருந்து  பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே  வடநாட்டில் இருந்து ஏராளமான சாமியர்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் உள்ள கோவில்களில் முகாமிட்டு உள்ளனர்.

மகா புஷ்கர விழாவையொட்டி  3 காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 16 போலீஸ் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிறப்பு பயிற்சி பெற்ற 90 காவல்துறையினர் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினரும், 27 படகுகளும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags: Once in 144 years: Nellai Tamiraparani Maha Pushkaram festival started, தாமிரபரணி மகா புஷ்கர விழா: 144ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக தொடங்கியது