சென்னை:

ஓட்டல்களில் தங்குவதற்கு தற்போது ஒரு நாள் வாடகை வசூல் செய்யப்படுகிறது. குறைந்த அளவு நேரம் மட்டுமே தங்குபவர்களுக்கு நாள் வாடகையை அதற்கு ஏற்ப கணக்கிட்டு வசூல் செய்யும் முறையை ஓட்டல்கள் அறிமுகம் செய்து வருகிறது. இந்த வசதி யாத்ரீகர்கள், சில பயணிகளுக்கும் சவுகர்யமாக இரு க்கும்.

சில மணி நேர பணிக்காக வந்து செல்லும் பயணிகளுக்கு இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும். ஃப்ரோடல்ஸ்.காம் மூலம் மும்பை அந்தேரியில் உள்ள இம்பீரியல் பேலஸ் ஓட்டலில் 2 மணி நேரம் தங் க்கூடிய பேக்கேஜ்க்கு ரூ. 630 வசூல் செய்யப்படுகிறது. சாதாரணமாக இங்கு ஒரு இரவு தங்குவதற்கு ரூ. 2, 637 வாடகையாகும்.

விமானநிலையம், ரெயில்வே ஸ்டேஷன், ஆன்மீக ஸ்தலங்களில் உள்ள பிரபல ஓட்டல்கள் இந்த குறுகிய கால வாடகையை வசூல் செய்கின்றன. ஓட்டல் செயின் லெமன் ட்ரீ என்ற நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதை அறிமுகம் செய்தது. ‘‘60 முதல் 70 சதவீத ஓட்டல்களில் பயணிகள் மாலை நேரங்களில் தங்குவதற்கு வருகின்றனர். மறுநாள் காலையில் புறப்பட்டுச் சென்றுவிடுகின்றனர். அதனால் தொழில்சார்ந்த எங்களது ஓட்டல்களில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது’’ என்று லெமன் ட்ரி வருவாய் நிர்வாகம் மற்றும் இ காமர்ஸ் பிரிவு பொதுமேலாளர் தேவேந்தர் குமார் தெரிவித்தார்.

குறுகிய கால தங்கலுக்கும், புத்துணர்ச்சி பெற்று கொள்வதற்கும் நேரத்தின் அடிப்படையில் வாடகை வசூல் செய்யும் இந்த திட்டம் திருப்பதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 6-ஹவர்லி, ப்ரோடெல்ஸ், மிஸ்டே, 9டு5.காம் போன்ற இணையதளங்கள் மூலம் குறுகிய கால ஓய்வுக்கான ஓட்டல்கள் புக்கிங் செய்யப்படுகிறது.

பகல் நேரத்தில் குறிப்பாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஓட்டல்களின் அறைகள் காலியாக தான் கிடக்கிறது. இதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது என்று லெமன் ட்ரி குமார் தெரிவித்தார்.

இதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 100 சதவீதம் புக்கிங் அதிகரித்துள்ளது. இந்தமுறைக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பெரும்பாலான ஓட்டல்கள் இதற்கு மாற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கும் இது செலவை குறைக்கும்.

ரெயில்வே ஸ்டேஷன் காத்திருப்பு அறை, விமான நிலைய வரவேற்பு அறைகளில் பயணிகள் பல மணி நேரம் காத்திருப்பதற்கு மாற்றாக இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். அதோடு முழு நாளுக்கான வாடகையை செலுத்த வேண்டிய அவசியமும் ஏற்படாது என்றும் குமார் தெரிவித்துள்ளார்.