சென்னை,
ழக்கத்தைவிட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 66 சதவிகிதிம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் வர்தா புயல், இன்று காலை விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 990 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது.

நேற்றைக்கும் இன்றைக்கும் இடைப்பட்ட காலத்தில், மணிக்கு 2 கி.மீ., தூரத்தில் இந்த புயல் மெதுவாக நகர்ந்துள்ளது. அடுத்து வரும் 2 நாட்களில், இந்த புயல் வடமேற்கு திசையில் நகரும். 12ந் தேதி மாலை நெல்லூருக்கும் காக்கி நாடாவுக்கும் இடையை கரையை கடக்கும்.
இந்த புயல் கரையை கடக்கும் முன்னர், சற்று வலுவிழக்கக்கூடும். தமிழக மீனவர்கள் ஆந்திர கடற்கரை அருகே மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்த வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்யும்.
சென்னையில் மழை பெய்ய வாய்ப்பில்லை.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை  இயல்பை விட 66 சதவிகிதம் குறைவாக உள்ளது எனக்கூறினார்.

வர்தா புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து  பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
வார்தா புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.