சென்னை: திமுக ஆட்சியில் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ கூறி, கல்லூரி மாணவிகளுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி  ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்கினார்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. ஏராளமான பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. அதுபோல காவல்துறையினரின் நடவடிக்கைகளும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இது தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.   தமிழகத்தில்  திமுக பொறுப்பேற்றதில் இருந்து,  கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது, ரவுடிகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு நடைபெறுவதாகவும்,பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சுழ்நிலை உள்ளதாகவும்,  அதை திமுக அரசு தடுத்து நிறுத்த தவறிவிட்டது என எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் அஇஅதிமுக சார்பில் கல்லூரி மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு ஆபத்து காலங்களில்  தங்களை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பு உபகரணங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பாக பெண்களின் பாதுகாப்பிற்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்க இருப்பதாக தெரிவித்தார், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்கு உட்படுவதாக கூறினார்.

தமிழக அரசு  உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நாளுக்கு நாள் கூட்டு பாலியல் பலாத்காரமும், சிறுவயது பெண்களுக்கு பாலியல் தொல்லையும் அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.   திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில்   பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.   கூட்டு பாலியல் வன்கொடுமை அதிகரித்திருக்கிறது.   பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி  வருகிறது.   அதனால் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.   அதற்குத்தான் பெப்பர் ஸ்பிரே வழங்கப்பட்டிருக்கிறது.   ஆபத்து காலத்தில் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் .  அதிமுகவும் முடிந்த அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் என்றும் கூறினார்.