புதுச்சேரி:  தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தடை கிடையாது என்று அறிவித்துள்ள மாநில அரசு,  பொங்கல் மற்றும் தைப்பூசம் திருவிழாவைலயொட்டி,  கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது என்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் தடையில்லை என்றும் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உள்பட இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு திமுக அரசு தடை விதித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்துக்களின் முக்கிய பண்டிகையான தைப்பூசம் திருவிழாவிலும் கோவில்களுக்கு செல்ல தடை போட்டுள்ளது. இது மக்களியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் கோவிட் மேலாண்மை குழுவின் அவசர கூட்டம் இன்று துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் பொங்கல் விழா கொண்டாட தடை இல்லை என்றாலும், காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.