ஹவானா: உள்நாட்டில் எந்தப் புதிய கொரோனா தொற்றும் இல்லை என்பதை, கடந்த 4 மாதங்களில் முதன்முறையாக அறிவித்துள்ளது கியூபா.
சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் உள்ளிட்டவைகளோடு, தனது வழக்கமான பயணத்தை அந்நாடு தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவல் குறித்த செய்திகளை தினமும் அறிவிக்கும், அந்நாட்டு பொதுசுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் ஃபிரான்சிஸ்கோ துரான் இந்த அறிவிப்பை வெளியிடும்போது, முகத்தில் மாஸ்க் இல்லாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இரண்டாவது முறையாக வெளியாகும் நல்ல செய்தியாகும்.
தலைநகர் ஹவானாவில் ஒரேயொரு உள்ளூர் நோயாளி மட்டுமே உள்ளதாக அவர் அறிவித்தார். மற்றபடி, கியூபாவின் பிற தீவுகளில் வசிக்கும் 11.2 மில்லியன் மக்களில், கடந்த 1 மாதத்திற்கும் மேலாக யாருக்கும் தொற்று இல்லை என்று கூறப்பட்டுள்ளது.