டெல்லி:  ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்ல; கொலீஜியம் அதற்கு விதிவிலக்கல்ல என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.  “நான் உட்பட அனைத்து கொலீஜியத்தின் நீதிபதிகளும், அரசியலமைப்பை செயல்படுத்தும் விசுவாசமான வீரர்கள்” என்று தலைமை நீதிபதி கூறினார்.

அரசியலமைப்பு நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்ற வருகிறது. இதையொட்டி,  டெல்லியில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பார் கூட்டமைப்பு சார்ப்பில் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்லது. அதற்கு கொலீஜியம் முறை மட்டும் விதிவிலக்கா என்ன? “நான் உட்பட அனைத்து கொலீஜியத்தின் நீதிபதிகளும், அரசியலமைப்பை செயல்படுத்தும் விசுவாசமான வீரர்கள்”,  ஆனால் கருத்து வேறுபாடுகளோ, சிக்கல்களோ ஏற்படும்போது நாம் அந்த அமைப்புக்கு உட்பட்டே அதற்கு தீர்வு காண்பது அவசியம் என கூறினார்.

மேலும்,  நீதிபதிகள் அரசியல் சாசனத்தை அமல்படுத்தும் நேர்மையான வீரர்கள். கொலீஜியம் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதால் மட்டுமோ அல்லது நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவதால் மட்டுமோ நீதித்துறைக்கு நல்லவர்களைக் கொண்டுவந்து விட முடியாது. நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்த சம்பளத்தை நீதிபதிகளுக்குக் கொடுத்தாலும் மூத்த பிரபல வழக்கறிஞர்கள் ஒருநாள் சம்பாத்தியத்தில் அது ஒரு சிறு பகுதியாகத் தான் இருக்கும் என மத்தியஅரசுக்கு சுட்டிக்காட்டியர்,  அதையும் மீறி ஒரு வழக்கறிஞர் நீதிபதியாவது என்பது மனசாட்சியின் குரலுடன் இயைந்து போவது மக்கள் சேவையில் அவருக்கு உள்ள அர்ப்பணிப்புதான் என்றார்.

கொலீஜியம் சர்ச்சைக்களுக்கு விடை என்னவெனில் நாம்,  எப்படி முன்மாதிரியாக திகழ்ந்து இன்றைய இளைஞர்களின் கனவிற்கு வித்திடுகிறோம் என்பதில்தான் உள்ளது என்றவர்,  நீதிபதிகளின் ஓய்வுக் காலத்திற்குப் பின்னரும் கூட அவர்களிடமிருந்து பிரித்து எடுக்க முடியாத ஒன்று மனநிறைவு ஏற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

நீதித்துறையில் அங்கம் வகிக்கும் பலதரப்பட்ட மக்களின் அனுபவத்தை நாம் பெறுவது மிகவும் முக்கியமானது. அவர்களின் அறிவும் புரிதலும் நிறுவனத்தை வலுப்படுத்தும். அனைத்தும் முக்கியமாக, சட்டத் தொழில் மற்றும் நீதித்துறையில் ஒதுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் மேம்படுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கூறினார்

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையேயான மோதல் என்பது அர்த்தமற்றது. ஏனெனில் இரண்டுமே ஒரே அரசியல் சாசனத்தின் உருவாக்கங்கள். இந்திய நீதித்துறையின் சுதந்திரம் எவராலும் சீர்குலைக்க முடியாதபடி இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். நமக்குள் நாமே சண்டையிட்டுக் கொள்வதில் எந்தப் பலனும் இல்லை” என்றார். நீதிமன்றங்களின் செயல்பாட்டை மேம்படுத்த தொழில்நுட்பத்தை நாங்கள் பின்பற்றி வருகிறோம். மக்கள் நீதிக்காக நீதிமன்றங்களை அணுகுவதற்குப் பதிலாக நீதிமன்றங்கள் மக்களைச் சென்றடையும் வகையில் மாற்றியமைக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் அவசியமானது.
நம்மைப் போன்ற பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், நீதி வழங்கல் அமைப்பு அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதே ஒரு நிறுவனமாக நீதித்துறை எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாகும். சவால்களுக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

மேலும், சட்டமியற்றும் துறை 65,000 சட்டச் சொற்களின் சொற்களஞ்சியத்தைத் தயாரித்துள்ளது. அதை டிஜிட்டல் மயமாக்கி, தேடக்கூடிய வடிவத்தில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட சட்ட சொற்களஞ்சியங்களைச் சேகரித்து, டிஜிட்டல் மயமாக்கி, தேடக்கூடிய வடிவத்தில் பொது மக்களுக்குக் கிடைக்கச் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றவர்,  பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எச்சரித்த போது அவர் கூறிய வார்த்தைகளை நினைவு கூர்வது பொருத்தமானது, இந்த சுதந்திரம் நம் மீது பெரும் பொறுப்புகளை சுமத்தியுள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள், சுதந்திரம் பெற்றதன் மூலம் தவறு நடந்தால் ஆங்கிலேயர்களைக் குறை கூறுவதை நாம் மறந்துவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.