சென்னை; அரசு பள்ளியில் நுழைவு தேர்வு கிடையாது, மாணவர்கள் குறும்படம் எடுக்க பயிற்சி அக்கப்படும், மாணவர்களை ஹாலிவுட் அழைத்து செல்ல திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

சென்னையில், மாணவர்கள் குறும்படங்களை எடுக்கும் விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“சிறார் திரைப்படங்கள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மாணவர்களுக்கு இறுதிக் கட்டப் பயிற்சி சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் 150 பேர் பங்கேற்கின்றனர். குறும்படத்துக்கான முழுத்திறனை மாணவர்கள் காட்ட வேண்டும்.

குறும்படப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவர். கல்வி தவிர தனிப்பட்ட திறமைதான் நமக்கான சிறப்பான வாழ்க்கையை பெற்றுத் தரும் என்றார்.

மேலும்,  சிறார் திரைப்பட விழாவில் வெற்றி பெறும் 25 மாணவர்கள், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஹாலிவுட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். யாரையோ நம்பி, உங்களை அனுப்பி வைக்கப்போவது இல்லை, நானே அவர்களுடன் செல்லப்போகிறேன்  என்றார்.

மாதிரிப் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண் உள்பட பல அளவீடுகளின் அடிப்படையில் சேர்க்கப்படுவர். நுழைவுத் தேர்வு என்பது கிடையாது. மாதிரிப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதே நேரத்தில் பிற மாணவர்களையும் தொடர்ந்து படிக்க வைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெயில் காலம் தொடங்க உள்ளதால், ஏற்கெனவே திட்டமிட்டப்படியும், தேர்வு அட்டவணைப்படியும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்படும் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையில் நிதி சார்பற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து வருகின்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும்.

ஒன்றாம் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கப்படும் போது, ஆறுவயதுக்கு மேல் சேர்க்க வேண்டும். தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை தயாரிக்கும் பணிகள் நடப்பதால் அந்த பணிகள் ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படுமானால் அந்த பரிந்துரையின் அடிப்படையில் முதல் வகுப்பில் குழந்தைகள் சேர்ப்பதற்கான வயது குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.