திருச்சி:

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய ரயில்சேவை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி தொகுதி எம்.பி.  திருநாவுக்கரசர் கூறினார்.

திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழக காங்கிஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

அதன்படி, நேற்று திருச்சி மாநகரப்பகுதிகளில் உள்ள  தில்லைநகர், உறையூர் வெக்காளியம்மன் கோயில், புத்தூர் பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய திருநாவுக்கரசர்,

பொதுமக்களின் வசதியை கருத்தில்கொண்டு, திருச்சி- பெங்களூரு இடையே புதிய ரயில் போக்கு வரத்து தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  திருச்சி விமான நிலைய ஓடு பாதையை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

மேலும் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

திருநாவுக்கரசருடன், திருச்சி மேற்கு தொகுதி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவும் வந்திருந்தார். அப்போது பேசிய நேரு, வரும் உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று கூறினார்.