சென்னை: தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநர் மூலம் அனுப்பிய நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் பரீசிலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்து உள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி ஏற்கனவே அதிமுக ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்டத. இதையடுத்து திமுக ஆட்சி பதவி ஏற்றதும்,  2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இம்மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து மீண்டும், தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இம்மசோதா மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இம்மசோதா மீது மத்திய அரசு ஏற்கனவே விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசும் பதில் அனுப்பி இருந்தது. அதைத்தொடர்ந்து,  மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை மீண்டும் தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது அதில், ஏற்கனவே மத்திய அரசானது, நீட் மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு உள்ள அதிகாரம்என்ன? நீட் மசோதா மத்திய அரசின் அதிகார வரம்பில் வருகிறாதா? தேசிய மருத்துவ ஆணைய சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு இது முரண்பட்டு அமைந்துள்ளதா? தரமான கல்வி, வெளிப்படைத் தன்மை, தேசிய தகுதி நுழைவுத் தேர்வு உள்ளிட்ட வரலாற்று சீர் திருத்தங்கள் உறுதி செய்யும் வகையில் உள்ள நீட் தேர்வுக்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்துமா? நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துமா? அரசியல் அமைப்பு சட்டப்படி இந்த சட்டம் செல்லத்தக்கதா? தேசிய கல்வி கொள்கைக்கு முரணாக அமைந்து உள்ளதா? ஆகிய கேள்விகளை தமிழ்நாடு அரசிடம் கேட்டிருந்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி ஓரிரு வாரங்களில் மத்திய அரசுக்கு மீண்டும் பதில் அனுப்பி வைக்கப்பட்டது.

இநத் நிலையில், மதுரை நாடாளுமன்ற தொகுதி  சு.வெங்கடேசன் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று 2023 ஜனவரியில்  கடிதம் அனுப்பியிருந்தார். அவரது கடிதத்தில்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள குடியரசு தலைவர் முர்மு,  . நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என எம்.பி சு.வெங்கடேசன் அனுப்பிய கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.