டெல்லி: நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள் என்றும், தடுப்பூசியால் மட்டுமே கொரோனா 3வது அலையின் தாக்கத்தை தடுக்க முடிந்தது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னமும் மிரட்டி வருகிறது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கொரோனா தொற்றின் தாக்குதலில் இருந்து தப்பி உள்ளனர். இதனால் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இந்தியாவில் கொரோனா முதல்அலை, 2வது அலையின்போது ஏற்பட்ட தாக்கம் 3வது அலையின்போது ஏற்படவில்லை. இதற்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டதே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் பல்ராம் பார்கவா வெளியிட்டுள்ள தகவலின்படி,  நாடு முழுவதும் 78.1 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 94.9 சதவீதம் பேர் என்றும் ‘மிகப்பெரிய அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் 3-வது அலையில் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியான 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம்.

இவர்களில் இதுவரை 49 லட்சத்து 23 ஆயிரத்து 228 பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை கூட போட்டுக்கொள்ளவில்லை.

முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில், 1 கோடியே 29 லட்சத்து 32 ஆயிரத்து 682 பேர் இன்னும் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.