நாசா சாதனை: சூரியனுக்கு மிக அருகில் சென்ற விண்கலம்!

நாசா உருவாக்கியுள்ள பார்க்கர் சேலார் விண்கலம், சூரியனை நெருங்கிச் சென்று சாதனை புரிந்துள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஏழு ஆண்டுகளில் சூரியனை 24 மணிநேரமும் கண்காணித்து சூரியன் பற்றி தெரியாத பல தகவல்களை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

nasa

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனை ஆய்வு செய்வதற்காக, பார்க்கர் சேலார் என்ற விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் என்ற ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, இந்த பார்க்கர் சேலார் விண்கலம் சூரியனுக்கு ஏவப்பட்டது.

சுமார் 612 கிலோ எடையும், 9 அடி 10 இன்ச் நீளமும் உடைய பார்க்கர் சேலார் விண்கலம், சூரியனின் மேற்பரப்பு வரை சென்று சூரியனை ஆய்வு செய்து இதுவரை தெரியாத பல தகவல்கள் வழங்க உள்ளது. இதற்காக 1,400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தைத் தாங்கும் வகையில், கார்பனால் உருவாக்கப்பட்ட வெளித்தகடு பொருத்தப்பட்டுள்ளது.

வெப்பச் சலனம், வெப்பக் கடத்தல், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்படாத அளவுக்கு பார்கர் விண்கலம் பாதுகாப்பாய் அனுப்பபட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 1976ம் ஆண்டு ஜெர்மனி-அமெரிக்க கூட்டணியில் ஏவப்பட்ட ஹூலியோஸ் 2 என்ற விண்கலம் 26.6 மைல் தூரத்துக்கு சூரியனை நெருங்கி சென்றது. இந்நிலையில், தற்போது பார்க்கர் சேலார் விண்கலம் 26.6 மைல் தூரத்தைக் கடந்து ஹூலியோஸ் 2 விண்கலத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

இன்னும் 7 நாட்களில் 15 மில்லியன் மைல் தொலைவில் இந்த விண்கலம் சூரியனை நெருங்கி விடும். பின்னர், 3.8 மில்லியன் மைல் தொலைவில் சூரியனின் மேற்பரப்புக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டு, சூரியனை 24 மணி நேரமும் கண்காணித்து தகவல்களை வழங்கும். பூமி உட்பட அனைத்துக் கோள்களுக்கும் ஆதாரமாக சூரியன் விளங்கும் நிலையில், மனித அறிவின் ஆற்றலால் சூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சேலார் பார்கர், வரலாற்றுச் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
English Summary
NASA's Parker Solar Probe breaks record, becomes closest spacecraft to Sun