இன்சைட் விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக இறங்கியது

வாஷிங்டன்

அமெரிக்க விண்கலமான இன்சைட் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது முதல் புகைப்படத்தை அனுப்பி உள்ளது.

பூமியின் அண்டைய கிரகமான செவ்வாய் கிரகம் சிவப்புக் கோள் என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ சாத்தியங்கள் உள்ளதா என்பதை கண்டறிவது குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆய்ந்து வருகிறது.

சுமார் 50 கோடி கிமீக்கும் அதிக தூரமுள்ள இந்த செவ்வாய் கிரகத்துக்கு இன்சைட் என்னும் விண்கலத்தை நாசா கடந்த மே மாதம் 5 ஆம் தேதி விண்ணில் ஏவியது. அந்த விண்கலம் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கி உள்ளது.

இந்த இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கும்  போது பயங்கர புழுதி கிளம்பியது. அதனால் சுமார் 7 நிமிடங்களுக்கு நாசாவில் உள்ள விண்கல தொடர்பு மையம் கடும் பரபரப்புக்கு உள்ளானது. ஏராளமாக புழுதி கிளம்பியதல் விண்கலத்தின் லென்ஸுகள் மறைக்கப்பட்டுள்ளதால்  விண்கலத்தை தரை இறக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புழுதிப் படலம் அடங்கியதும் தரை இறங்கிய இன்சைட் விண்கலம் முதல் படத்தை அனுப்பி உள்ளது. ஏராளமான தூசு உள்ளதால் படம் தெளிவாக இல்லை என கூறப்படுகிறது. அத்துடன் இன்சைட் விண்கலம் தனது புதிய வீட்டின் முதல் தோற்றம் என்னும் பொருளில் செய்தி ஒன்றை அனுப்பி உள்ளது.

இதனால் நாசா விஞ்ஞானிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள் மற்றும் வெப்ப பரிமாற்றங்கள் குறித்து முதலில் ஆய்வு செய்ய உள்ளது. அதன் பிறகு செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய உள்ளது.

Tags: Nasa's InSight satellite landed at mars successfully