மும்பை: வகுப்பறையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் சிறுமிக்கு மட்டுமின்றி பள்ளி நிர்வாகத்துக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவில், சிறார்களுக்கு எதினரா பாலியல் சம்பவம் 2021ம் ஆண்டு 36.05 சத விகிதம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

கிரேட்டர் மும்பை மாநகராட்சி பள்ளி மாட்டுங்கா பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் சேர்ந்து, தனது வகுப்பு சக மாணவி ஒருவரை பள்ளி அறையில் வைத்து யாரும் இல்லாத நேரத்தில்  பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். “நடனப் பயிற்சிக்காக சக வகுப்பு மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே வந்தபோது, அந்தச் சிறுமி தனது இரண்டு வகுப்புத் தோழர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சூழ்நிலையைப் பயன்படுத்திக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் நவம்பர் 30ந்தேதி அன்று நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருடன் கூறிய நிலையில், அவர்கள் காவல்துறையில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இரண்டு மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்ப்டட மாணவர்கள் இரண்டு பேரும் மைனர்கள். இதனால் அவர்கள்மீது,  இந்திய தண்டனை சட்டம் 376 (டி) மற்றும் போக்சோ ஆகிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சிறார்களுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2019ல் 47,335 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, இந்த ஆண்டில் பதிவான மொத்த குற்றங்களில் இந்த போக்சோ குற்றங்கள் மட்டும் 31.94 சதவிகிதமாகும். இது 2020ல் 36.73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல 2021ல் 36.05 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. இந்த குற்றங்களை களையெடுக்க வேண்டுமெனில் பெண்கள் குறித்த புரிதல்கள் அவசியம் என மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.